Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லை இஸ்ரோ மையத்தில் வெடித்தது என்ன? மகேந்திரகிரி மலையில் புகையால் பதற்றம்!

நெல்லை மாவட்டத்தில் மகேந்திரகிரி மலையில் உள்ள இஸ்ரோ மையத்தில் வெடிச்சத்தம் கேட்டதுடன் புகை வந்ததால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். 

மகேந்திரகிரி வளாக நுழைவாயில்

நெல்லை மாவட்டம், காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி மலையில் இஸ்ரோ மையத்தின் கட்டுபாட்டின் கீழ் செயல்படும் திரவ இயக்க அமைப்பு மையம் உள்ளது. இந்தியாவின் சார்பாக விண்ணில் ஏவப்படும் சொந்தத் தயாரிப்பு ராக்கெட்டுகளின் பெரும்பாலான உதிரிப் பாகங்கள் இந்த மையத்திலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்த மையமானது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. உள்ளூர் காவல்துறையினரும் அவர்களுக்கு உதவி வருகின்றனர். 

பலத்த பாதுகாப்பு மிகுந்த இந்த மையத்தில் அந்நியர்கள் அத்துமீறி ஊடுருவும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதுவும், பீகார், சட்டீஸ்கர், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலத்தவர் மட்டுமே பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த மையத்துக்குள் ஊடுருவிச் சென்று உள்ளே சுற்றித் திரியும் போது பிடிபடுகின்றனர். இதுவரையிலும் 10 பேர் வரை இதுபோல பிடிபட்டு உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரையுமே மனநோயாளிகள் என்றே பாதுகாப்புப் படையினர் தெரிவித்து விடுவித்து இருக்கிறார்கள்.

வளாகம்

மனநோயாளிகள் என்ற பெயரில் பாதுகாப்பு வளையத்தைக் கடந்து ஊடுருவிச் சென்றது எப்படி என்பது குறித்தோ, அவர்கள் மகேந்திரகிரி திரவ இயக்க மைய வளாகத்தில் பிடிபட்ட காரணத்தையோ இதுவரை அறிவித்தது கிடையாது. அத்துடன், மகேந்திரகிரி மலைப் பகுதியிள் ஆள் இல்லாத விமானங்கள் அடிக்கடி ரோந்து சுற்றும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இது தொடர்பாக தொழில்பாதுகாப்புப் படையினர், உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் செய்த சம்பவங்களும் இருக்கிறது. 

இத்தகைய சூழலில், இந்த மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அத்துடன், அந்தப் பகுதியில் புகையும் வெளியேறி இருக்கிறது. சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்தச் சத்தம் கேட்டுள்ளது. மலையில் வெடித்தது என்ன? என்பது பற்றியும் அங்கு வெடிக்கக் காரணமாக இருந்தது யார்? என்பது குறித்தும் தொழில் பாதுகாப்புப் படையினர் மலைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். 

கடலோரப் பகுதியில் இருக்கும் கூடங்குளம் அணு உலை மற்றும் இஸ்ரோ மையம் ஆகியவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தற்போது வெடித்த பொருள் குறித்து மூடி மறைக்காமல் உண்மையைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement