வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/09/2017)

கடைசி தொடர்பு:20:00 (24/09/2017)

வயலுக்குள் புகுந்த கரடி! தொழிலாளர்களை விரட்டியதால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலையடிவாரப் பகுதியில் வயிலில் வேலை செய்த தொழிலாளர்களை கரடி விரட்டியதால் அனைவரும் அசத்துடன் ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருவர் தடுக்கி விழுந்ததில் காயம் அடைந்தார்.

கரடி

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், சிறுத்தை, புலி, கரடி, மான், யானை, மிளா உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் சிறுத்தை. யானை நுழைவது அவ்வபோது நடக்கிறது. சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து நாய், ஆடு போன்றவற்றை அடித்துச் செல்கின்றன. யானைகள் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. 

விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயியான முருகையா என்பவரின் வயல் வடமலைசமுத்திரம் பகுதியில் இருக்கிறது. இவரது வயலில், வெண்டைக்காய், சீனிஅவரை ஆகியவற்றைப் பயிரிட்டு இருக்கிறார். அதனை பறிப்பதற்காக அவர் வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது வயலுக்குள் கருப்பு நிறத்தில் ஒரு உருவத்தை பார்த்துள்ளார். கவனமாகப் பார்த்தபோது கரடி என்பதை அறிந்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

அதற்குள் அந்தக் கரடி சத்தம் போட்டபடியே விரட்டி இருக்கிறது. இதனால் பக்கத்தில் உள்ள வயல்களில் வேலை செய்த தொழிலாளர்களும் உயிரைக் கையில் பிடித்தபடியே தலைதெறிக்க ஓடியிருக்கிறார்கள். இந்த நிலையில் ஓட்டம் பிடித்த முருகையா, வயலில் உள்ள வரப்பு தடுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்குள் கரடி அங்கிருந்து சென்று விட்டது. இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அச்சத்தால் வயலுக்குச் செல்லாமல் இருக்கிறார்கள். 

இது பற்றி அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ’’எங்களது வயல் பகுதியானது மலையடிவாரத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதால் இதுவரை கரடி உள்ளிட்ட எந்த வன விலங்குகளும் வந்ததில்லை. முதல்முறையாக வந்த கரடி வயலில் இருந்தவர்களைப் பார்த்து சத்தமிட்டபடி விரட்டியதால் அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் சுற்றுத் திரியும் கரடியை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்கள்.