அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் குழப்பம்: தினகரன்- எடப்பாடி அணியினர் மோதல்! | edappadi team fights with Dinakaran team in sivagangai

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (24/09/2017)

கடைசி தொடர்பு:19:40 (24/09/2017)

அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் குழப்பம்: தினகரன்- எடப்பாடி அணியினர் மோதல்!

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம், எடப்பாடி அ.தி.மு.க அணியின் சார்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் பாஸ்கரன் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில், நெற்றியடி நாகையன் பேசும் போது” அ.தி.மு.க-வின் உண்மை விசுவாசிகள் எல்லாம் அம்மாவின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எடப்பாடி மற்றும் ஒ.பிஎ.ஸ் தலைமையை ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் 18 எம்.எல்ஏ.-க்கள் கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு  வாக்களித்தப் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள். அம்மாவுக்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள். அந்த ஆட்சி காப்பாற்றப்பட வேண்டாமா? மானம் காத்த மானாமதுரை தொகுதியின் எம்.எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்ஏ மாரியப்பகென்னடி இந்த தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்து விட்டார். பிறகு எப்படி மக்களைச் சந்திக்க வருவீர்கள். பணத்திற்காக எம்.எல்ஏ பதவியை தினகரனிடம் அடகு வைத்துவிட்டார் மாரியப்பகென்னடி. இதற்காக வெட்கப்படவேண்டும்” என நிறைவு செய்தார். 

எம்.எல்ஏ மாரியப்பகென்னடியின் ஆட்கள், நெற்றியடி நாகையனை வழிமறித்து எங்க எம்.எல்ஏ-வை எப்படித் தரக்குறைவாக பேசலாம் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.பி செந்தில்நாதன், முன்னாள் எம்.எல்ஏ குணசேகரன் ஆகியோர் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எம்.எல்ஏ தரப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் எம்.எல்ஏ தரப்பும், சசிகலா குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. தினகரன் தரப்புக்கும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தரப்புக்கும் இடையே மோதலுக்கான பிள்ளையார் சுழி மானாமதுரையில் போடப்பட்டிருக்கிறது.

இது குறித்து எம்.எல்ஏ மாரியப்ப கென்னடி தரப்பிடம் பேசும் போது, “அநாகரீகமாக முதலில் பேச வைத்ததே அமைச்சர் பாஸ்கரனும் எம்.பி செந்தில்நாதனும்தான். இவர்கள் யார் என்று  காலம் பதில் சொல்லும். இந்த மாத இறுதியில் டி.டி.வி தினகரன் தலைமையில் மானாமதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்" என்கிறனர்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க