வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (24/09/2017)

கடைசி தொடர்பு:15:26 (28/06/2018)

அரசு ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு பேரிடர் கால மீட்புப் பயிற்சி ஒத்திகை

பேரிடர் கால மீட்பு பயிற்சி மற்றும் ஒத்திகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பேரிடர் கால முதன்மை பொருப்பாளர்களுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சி மற்றும் ஒத்திகை அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரை பகுதியை கொண்டது. புயல், வெள்ளம், கடல் சீற்றம்,  வறட்சி  உள்ளிட்ட பேரிடர்கள் நிகழும் காலங்களில் பொதுமக்களை அதில் இருந்து பாதுகாத்திடும் வகையில் பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம், பாதுகாப்பான வீடுகள், முன்னெச்சரிக்கை கோபுரங்கள், பேரிடர் கால சாலைகள் மேம்பாடு திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடலோரக் கிராமங்களில் பேரிடர் காலங்களில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில்  ஈடுபடுவதற்காக முன்னெச்சரிக்கை அணி, இடம் பெயர்தல் அணி, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் அணி, முதலுதவி அணி, பேரிடர் மைய பராமரிப்பு அணி என 5 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 180 கடலோர கிராமங்களில் 4768 பேர் இதில் உறுப்பினர்களாகவும், 678 பேர் ஆலோசனை குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது பாம்பு பிடித்தல், காற்றில் விழும் மரங்களை அப்புற படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் முதன்மை பொறுப்பாளர்கள் மற்றும் பேரிடர் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அளிக்கப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள சமூக அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை இயக்கம் ஆகியன ஒன்றினைந்து வழங்கும் இந்த பயிற்சி மற்றும் ஒத்திகை இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.