வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (24/09/2017)

கடைசி தொடர்பு:22:00 (24/09/2017)

தேர்வுக் கட்டண உயர்வுக்கு கண்டனம்: நாளை பல்கலைக் கழகம் முற்றுகை போராட்டம்!

தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நாளை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்து உள்ளது.

பல்கலை. போராட்டம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தேர்வுக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனை குறைக்க வலியுறுத்தி, பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இயங்கும் கல்லூரி மாணவர்கள் ஏற்கெனவே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், கட்டணத்தைக் குறைக்க முடியாது என பல்கலைக்கழகம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. ’பல்கலைக்கழகத் தேர்வுகள் நடத்துவதற்கு ஆகக்கூடிய செலவீனங்கள், மற்றும் இதரச் செலவுகளைக் கவனத்தில் கொண்டு பார்க்கையில், உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் சரியானது என முடிவு செய்யப்பட்டது’ என்று பதிவாளர் அறிவித்து இருப்பது மாணவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நாளை காலை 10.30 மணிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2000-க்கும் அதிகமான மாணவர்களைத் திரட்டி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய இந்திய மாணவர் சங்கத்தின் நெல்லை மாவட்டத் தலைவர் திருமலை நம்பி முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பல்வேறு கல்லூரிகளின் மாணவர் சங்க நிர்வாகிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சுந்தரனார் பல்கலைக்கழகம்

இந்தப் போராட்டம் குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளரான உச்சிமாகாளி கூறுகையில், ’’நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 54 வகையான பாடப்பிரிவுகளில் தேர்வு கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்தி இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை,  தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் 1,60 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். 

ஏழை.எளிய மாணவர்களின் உயர்கல்வியை பறிக்கும் வகையில், பல்கலைக்கழக நிர்வாகம் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இந்த ஆண்டு 120 சதவிகிதம் முதல் 500 சதவிகிதம் வரையிலும் கட்டணம் உயர்ந்துள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் பதிவெண் வழங்கப்படவில்லை. தேர்வு மறுமதீப்பிட்டு முடிவுகள் முழுமையாக வெளியிடப்படவில்லை. இது தவிர, ஆன்லைன் முறையில் உள்ள குளறுபடிகள் தீர்க்கப்படவில்லை. அவற்றை எல்லாம் சரிசெய்யவும் தேர்வுக் கட்டண உயர்வை முழுமையாக குறைக்கவும் வலியுறுத்தி, அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்புப் போரட்டம் நடத்துவார்கள். நெல்லையில் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் நடத்தப்படும்’’ எனத் தெரிவித்தார்.