வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (24/09/2017)

கடைசி தொடர்பு:22:30 (24/09/2017)

'நடிகர்களோடு போட்டோ எடுக்க ஏன் இப்படி பறக்கறீங்க?' - தியேட்டரில் கொதித்த மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கி, நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா நடித்த துப்பறிவாளன் படம் தமிழகம் கடந்த சில வாரத்துக்கு முன்பு வெளியானது. இந்நலையில், ரசிகர்களுக்கு நன்றி சொல்ல நடிகர் பிரசன்னாவை அழைத்துக் கொண்டு ஊர் ஊராக போய் கொண்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். தியேட்டரில் திடீர் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் திக்குமுக்காட வைத்து வருகிறார். அந்த வகையில் இன்று பிரசன்னாவோடு நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் துப்பறிவாளன் திரைப்படம் ஓடும் தியேட்டர்களுக்கு அவர் விசிட் அடித்தார். மதியம் நான்கு மணி போல், கரூரில் அந்த படம் ஓடிய எல்லோரா தியேட்டருக்கு பிரசன்னாவோடு விசிட் அடித்தார். அவரை விஷால் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் விஷால் பாபுவும்,பிரசன்னா ரசிகர் மன்ற நிர்வாகிகளும் வரவேற்றனர். 

திடீரென, தியேட்டருக்குள் மிஷ்கின் பிரசன்னாவோடு நுழைய, அப்போது படத்தில் கிளைமேக்ஸ் ஓடி கொண்டிருந்தது. அதை பார்த்ததும்,'படம் முடிந்ததும் உள்ளே போகலாம்?' என்று வெளியேற பார்த்தார் மிஷ்கின். ஆனால்,அதற்குள் ரசிகர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு குழும, அவர்களுக்கு முன் மீடியா பார்ட்னர்கள், அவர் முன்னே பிளாஷ் விழ போட்டோ எடுக்க ஆரம்பித்தார்கள். ரசிகர்களும் செல்போன்களில் போட்டோ எடுக்க ஆரம்பித்தார்கள். அதனால், படத்தை நிறுத்திவிட்டனர். 


 

அதனால்,கடுப்பான மிஷ்கின், "தம்பிகளா உங்களுக்கு அறிவில்லையா?. இந்த படத்து கிளைமேக்ஸ் காட்சியை நான் எவ்வளவு சிரமப்பட்டு எடுத்தேன் தெரியுமா?. ஆனா,அந்த கிளைமேக்ஸை முடிக்க விடாம இப்படி டிஸ்டர்ப் பண்ணலாமா?. நடிகர்களோடு போட்டோ எடுக்க ஏன் இப்படி பறக்கறீங்க?. யாரோ ஒரு நடிகரோட போட்டோ எடுக்க துடிக்கிற நீங்க,உங்க அம்மா அப்பாவோட போட்டோ எடுக்க நினைப்பீங்களா?" என்று திட்டிவிட்டு,"இந்த படத்தை வெற்றியடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி" என்று கடமைக்கு சொல்லிவிட்டு பிரசன்னாவோடு காரில் ஏறி கிளம்பினார்.