Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட இஸட் பிளஸ் பாதுகாப்பு யாருடைய உத்தரவால் விலக்கப்பட்டது?' - ஜி.ராமகிருஷ்ணன்

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த இஸட் பிளஸ் பாதுகாப்பு யாருடைய உத்தரவின் பேரில் விலக்கிக்கொள்ளப்பட்டது? என்று ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அந்தக் காலகட்டத்தில், அவரது உடல்நிலைகுறித்து பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. சர்ச்சைகளை எழுப்பியவர்கள் மீது வதந்தி பரப்பியதாக காவல்துறை வழக்குப் போட்டதுடன், கைதும்செய்தனர். 

ஜி.ராமகிருஷ்ணன்

முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். அப்போது, ஜெயலலிதா மரணம்குறித்து மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைக் குறிப்பிட்டு, விசாரணை நடத்த வேண்டும் என்று ஊடகங்களில் தெரிவித்தார். தற்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா மரணம்குறித்து பேசியுள்ளார். அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில், அவர் உடல்நிலைகுறித்து பொய்யான தகவல்களைத் தெரிவித்ததாகவும், அவரைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் பேசியுள்ளார். மேலும், ஜெயலலிதா கொல்லப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அப்போது, அவரின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறைகள் என்ன செய்தன என்ற கேள்வி வருவதுடன் - ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுவந்த இஸட் பிளஸ் பாதுகாப்பு, யாருடைய உத்தரவின் பேரில் விலக்கிக்கொள்ளப்பட்டது? ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கைய நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏன் அமைதிகாத்தார்கள்? அவர்கள் அமைதிகாத்ததன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. பதவியில் உள்ள அமைச்சர்கள் பொய்யான தகவல்களைப் பரப்பியதானது, தாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கும், அரசியலமைப்புக்கேவும் விரோதமாகச் செயல்பட்டதாகும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில், அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. அதிகாரிகள், அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது கைரேகையைப் பயன்படுத்தி, தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இப்போது, அந்த ஒவ்வொரு முடிவின் மீதும் சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது. அவர் மரணமடைந்ததை அறிவித்த இரவிலேயே, புதிய அமைச்சரவை பதவியேற்றதுடன், இக்காலகட்டம் முழுவதும் பதவியைக் கைப்பற்றவும், பேரத்துக்காகவும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகிறது. 

எனவே, ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரிக்கப்படவேண்டியுள்ளதால், நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. உடனடியாக, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, மாநில அரசை வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement