Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வருக்கு மட்டும்தான் காவிரி நீரா? -புஷ்கர விழாவின் இறுதியில் பக்தர்கள் ஆதங்கம்

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில், கடந்த 12-ம் தேதி தொடங்கிய காவிரி புஷ்கரம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவந்தது. இவ்விழாவின் இறுதி நாளான இன்று, சுமார் 2 லட்சம் பக்தர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மயிலாடுதுறைக்கு வந்திருந்தனர். இதனால் துலாக்கட்டம், பக்தர்களின் கூட்டத்தால் நிறைந்து.

புஷ்கரம்
 

"வெகு நாள்களுக்குப் பிறகு, காவிரி நீரில் புனித நீராட ஆர்வமாக வந்தோம். ஆனால், இங்கு எங்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. கடந்த 20-ம் தேதி, முதல்வர் நீராடியபோது மேட்டூரிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது. அந்த நீர் அன்றே வடிந்துவிட்டதால், நாங்கள் போர்வெல் நீரில்தான் நீராடினோம். முதல்வருக்காக திறந்துவிடப்பட்ட நீர், ஏன் எங்களுக்குத் திறந்துவிடப்படவில்லை. ஆன்மிகத்திலும் அரசியல் கலந்துவிட்டது" என்று புஷ்கரத்துக்கு இன்று வந்த பெரும்பாலான பக்தர்களின் ஆதங்கமாக இருந்தது.

புஷ்கரம்
 

விடுமுறை தினம் என்பதாலும் புஷ்கரத்தின் இறுதிநாள் என்பதாலும், நேற்றும் இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் புஷ்கர விழாவுக்கு வந்தனர். ஆனால், மேட்டூர் அணையிலிருந்து வந்த நீர் நிறுத்தப்பட்டதால், அனைத்து பக்தர்களும் தற்காலிக குளத்து நீரிலேயே நீராடினார். கடந்த 20-ம் தேதி, தமிழக முதல்வர் காவிரியில் நீராடுகிறார் என்பது உறுதிசெய்யப்பட்டவுடன், 13-ம் தேதி அன்று மேட்டூர் அணையிலிருந்து 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் மயிலாடுதுறை, மூவலூர் பகுதியில் தேக்கிவைக்கப்பட்டு 20-ம் தேதி  காலை 6.30 மணி அளவிலேயே துலாக்கட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அன்று காலை 9.45 மணிக்கு முதல்வர் நீராடினார்.

அன்று மாலையே தரும குளத்தில் தேக்கிவைக்கப்பட்டிருந்த நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், துலாக்கட்டம் மீண்டும் மணற்பரப்பாக மாறியது. எனவே திரும்பவும் போர்வெல்மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு பக்தர்கள் நீராட ஏற்பாடுசெய்யப்பட்டது. காவிரியில் நீர் வரத்து நின்றதால், பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். வேறு வழியின்றி போர்வெல் நீரிலேயே நீராடிச் சென்றனர்.

புஷ்கர விழா கமிட்டியினர், புஷ்கரம் நடக்கும் அனைத்து நாளும் காவிரியிலிருந்து நீர் திறந்து விடும்படி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், முதல்வர் வந்த நாளைத் தவிர மற்ற நாள்களில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.  ஆன்மிக விஷயத்திலும் பாரபட்சம் பார்ப்பதா, எங்களுக்கு உண்மையான காவிரி நீரில் நீராட பாக்கியம் இல்லையா? என்று புஷ்கர விழாவின் இறுதி நாளில் பக்தர்கள் தங்களது வருத்தத்தைத் தெரிவித்தனர். பக்தர்களுக்குச் செய்யப்பட்டிருந்த பேருந்து வசதியும் சரியான முறையில் இல்லை. பல பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யாததால், பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.

இவ்விழாவுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும், தனியார் வங்கி ஒன்று ரூ.1 கோடி கொடுத்தது. ஆனால், பக்தர்களுக்குச் செய்யப்பட்ட வசதிகள் எதுவும் திருப்திகரமாக இல்லை. பல கூச்சல் குழப்பங்களிடையே காவிரி மகா புஷ்கரம் நிறைவுற்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement