சென்னை சுரங்கப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து! அலறி ஓடிய பயணிகள் | Chennai corporation bus met accident at Paris corner

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (25/09/2017)

கடைசி தொடர்பு:11:45 (25/09/2017)

சென்னை சுரங்கப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து! அலறி ஓடிய பயணிகள்

சென்னை பாரிமுனை அருகே உள்ள சுரங்கப்பாதையில், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று சுவரில் மோதியது. இதனால், பயணிகள் அலறியதால் பரபரப்பு நிலவியது.

சென்னை கண்ணகி நகரிலிருந்து இன்று காலை 102கே என்ற அரசுப் பேருந்து ஒன்று பெருங்குடி, மேட்டுக்குப்பம், அடையாறு, மெரினா வழியாக பிராட்வே வந்துகொண்டிருந்தது. பாரிமனை ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால், பயணிகள் அலறினர். ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயன்றபோது, சுரங்கப்பாதையில் குறுக்கும் நெடுக்குமாக சுவரில் மோதியபடி நின்றது. அலறிய பயணிகள், உடனடியாக பேருந்திலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தால், சுரங்கப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து, போக்குவரத்துக் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போக்குவரத்தை மாற்றிவிட்டனர். குறுக்காக நிற்கும் பேருந்தை அங்கிருந்து அகற்றும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். கிரேன் மூலம் பேருந்து அகற்றும் பணியில் போக்குவரத்துக் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.