போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!

அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, ஓய்வூதிய நிலுவைத் தொகையை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தப் போவதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்தனர். இதையடுத்து, தொழிலாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக, மாதந்தோறும் ரூ.1,200 வழங்கப்படும் என்றும், டிசம்பர் முதல் வாரத்தில், மற்ற கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவது என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளன. 

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,200 வீதம் மாதந்தோறும் ரூ.15 கோடி, இந்த மாதம் முதல் அளிக்கப்படும். அவர்களின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக, டிசம்பர் முதல்வாரத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, நிலுவைத்தொகை அளிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், ‘போக்குவரத்துக் கழகத்தின் நிதிநிலையை அதிகரிப்பது தொடர்பாகவும், தொழிலாளர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட தொகையை அவர்களுக்குத் திரும்ப அளிப்பது தொடர்பாகவும் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க இருப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணத்தையும் ஏற்று, போராட்டத்தை ஒத்திவைக்க முடிவுசெய்துள்ளோம். பண்டிகைக் காலங்களில் மக்கள் சிரமப்படக்கூடாது என்பதாலும், இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!