வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (25/09/2017)

கடைசி தொடர்பு:17:15 (25/09/2017)

’பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க முடியாது’ - அமைச்சர் விளக்கம்

`பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முடியாது' என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி முதன்முறையாக பரோலில் விடுவிக்கப்பட்டார். உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பேரறிவாளனின் பரோல் விடுப்பை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று அவரின் தாயார் அற்புதம்மாள், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். பேரறிவாளனின் ஒரு மாத பரோல் நேற்று முடிவடைய இருந்த நிலையில், அவரது பரோல் விடுப்பை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, நீண்டகாலமாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.  

இதுகுறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று, அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவரது விடுதலை குறித்து தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிந்திக்க முடியும்’ என்று அவர் தெரிவித்தார்.