Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : கல்வி நிறுவனங்களை மிரட்டும் ஆளுங்கட்சி?

சேலம் மாவட்டம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வரும் 30-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்குத் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளையும் வாகனங்களையும் வழங்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் மிரட்டி வருவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சேலம் ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்கள்.

இதுப்பற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரவின், ''சேலத்தில் வரும் 30-ம் தேதி கருப்பூர் பொறியியல் கல்லூரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாடப்பட இருக்கிறது. சேலம் முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் 'தமிழ்நாட்டிலேயே வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார்.  

அதையடுத்து கடந்த ஒரு மாதமாக மாவட்ட அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு, மக்கள் நலப்பணிகள் என அனைத்தையும் புறக்கணித்து விட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஆளுங்கட்சியினர் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து திடக்காத்திரமான மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் வர வேண்டும்.

காலை 10 மணிக்கு வந்தால் மாலை 4 மணி வரை அமர்ந்திருக்க வேண்டும். இது தவிர தாங்கள் நடத்தும் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு டீசல் நிரப்பி  அனுப்ப வேண்டும் என்று மிரட்டி வருகிறார்கள். இது சம்பந்தமாகப் பல தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். பஸ் அனுப்புவதில்கூட சிரமம் இல்லை. மாணவ, மாணவிகளையும் அனுப்பச் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் யார் பொறுப்பேற்பது என்று கேட்டால் பள்ளி உரிமத்தையே ரத்து செய்துவிடுவோம். என்று ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாகச் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே உயர் நீதிமன்றம் அரசு விழாக்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளைப் பெற்றோரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. என்று சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் ஆளுங்கட்சியினர் நடந்துகொள்ளுகிறார்கள்” என்றார் கொந்தளிப்புடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement