பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

பட்டா கேட்டு தீ குளிக்க முயன்ற பெண்

வீட்டு மனை பட்டா வழங்காமல் 6 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸார் மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா புல்லமடை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவர் பாம்புகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். கேன்சர் நோயாளியான இவர், இந்த அறக்கட்டளையின் மூலம் பாம்புகள் மற்றும் வன விலங்குகள் குறித்த விழிப்புஉணர்வினை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று ஏற்படுத்தி வருகிறார். இதுதவிர வெறும் கைகளாலேயே பாம்பைப் பிடித்தும் வருகிறார்.

வயதான தாய் மற்றும் இரு குழந்தைகளுடன் புல்லமடை கிராமத்தில் வசித்து வரும் மணிமேகலை, தான் குடியிருந்து வரும் வீட்டுக்கு பட்டா கேட்டு கடந்த 6 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறார். ஆனால், இதுவரை அவருக்கு பட்டா வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாக மனுக் கொடுத்தும் தனக்கு பட்டா கிடைக்காததால் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தன் உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளித்து  தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.  இதைக்கண்ட போலீஸார் கண் இமைக்கும் நேரத்தில் மணிமேகலையைச் சுற்றி வளைத்து அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை கைப்பற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை செய்த போலீஸார்,  அவரது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்வதாக கூறி மணிமேகலையை மாவட்ட அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு எழுந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!