பயிர் காப்பீட்டுத் தொகை கேட்டு லாரியில் திரண்டு வந்த விவசாயிகள்!

பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் லாரியில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமி. மழையை மட்டுமே விவசாயத் தேவைகளுக்காக நம்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வழக்கத்தைவிட மிகக் குறைவான அளவே மழை பெய்ததால் மாவட்டத்தின் பெரும் பகுதி விவசாயிகள் வறட்சிக்கு ஆளாகினர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் திருவாடானைப் பகுதியும் இந்த வறட்சியின் பிடியில் இருந்து தப்பவில்லை. 

பயிர் காப்பீடு தொகை கேட்டு லாரியில் திரண்டு வந்த விவசாயிகள்


இந்நிலையில் வறட்சிக்கு ஆளான விவசாயிகளின் சுமையைக் குறைக்க பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வயல்களைப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து அதற்கான பங்களிப்பு தொகையும் அளித்தனர். ஆனால், திருவாடானை வட்டம் கூடலூர்  தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் பணம் செலுத்திய 193 விவசாயிகளுக்கும் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாகப் பல்வேறு போராட்டம் நடத்தியும் பயன் இல்லாததால் இன்று  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுதிரண்டு ஒரு லாரியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திறங்கினர். அங்கு  தங்களுக்குப் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!