"ஆளுநர் மாளிகை முற்றுகை" - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் எச்சரிக்கை | "Governor's House Siege" - Annamalai University Students Warn.

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (25/09/2017)

கடைசி தொடர்பு:20:15 (25/09/2017)

"ஆளுநர் மாளிகை முற்றுகை" - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

 "தங்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தவேண்டும். அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கட்டணத்தையே இங்கும் வசூலிக்கவேண்டும் என்று, 27-வது நாள்களாக பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர், அக்கல்லூரி மாணவ மாணவிகள். இவர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவிசாய்க்காததால் 4-வது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டம் குறித்து மாணவர்கள், "எங்களின் கோரிக்கையும், போராட்டமும் நியாயமானது. கடந்த 27 நாள்களாக பல்வேறுகட்ட போராட்டங்களை நாங்கள் அறவழியில்தான் முன்னெடுத்துவருகிறோம். இப்போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எங்கள்மீது காவல்துறையை ஏவிவிட்டது நிர்வாகம். மாணவர்களின் ஒற்றுமையைக் கண்டு அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். இனிமேல் எங்களின் போராட்டத்தை நிர்வாகமும், அரசும்தான் தீர்மாணிக்கவேண்டும். நான்காவது நாள்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதேநிலை நீடித்தால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கையிலெடுப்போம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம், அரசாங்க மருத்துவர்கள் சங்கம் மற்றும் பட்டம் மேற்படிப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் எங்களின் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு கொடுத்துள்ளனர். போராட்டம் முடிவுக்கு வரும்வரை அவர்கள் "கறுப்புப் பட்டை" அணிந்து பணிக்கு செல்வதாக உறுதிகொடுத்துள்ளார்கள். எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் வரும் 27-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்" என்று எச்சரித்துள்ளனர்.