வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (25/09/2017)

கடைசி தொடர்பு:20:38 (25/09/2017)

"பாலியல் பற்றிப் பேசுவது பெருங்குற்றம் அல்ல நண்பர்களே!” ‘பாலியல் பயில்’ கல்லூரியின் முயற்சி

பாலியல் பயல்

ண் - பெண் உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குழப்பங்களும் சிக்கல்களும் உருவாகி இருக்கின்றன. தாராளமயம் ஏற்படுத்திய தாக்கத்தினால், பெண்ணின் உடலை, பண்டமாக வணிக ஊடகங்கள் மாற்றியிருக்கிறது. இதுவரை அடக்கிவைக்கப்பட்டிருந்த பாலியல் வறட்சிக்குப் பெரும் தீனி போட்டுக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் பாலியல் வன்புணர்வுகளும் வன்முறைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அவற்றில் சில தொலைக்காட்சிகளின் பிரேக்கிங் நியூஸை நிரப்பும்போது மட்டும், பாலியல் கல்வி வேண்டும்; விழிப்பு உணர்வு வேண்டும் என்று கூடி பேசிவிட்டுக் கலைந்துவிடுவது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. இன்றுவரை ஒரு முறைப்படுத்தப்பட்ட பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அரசால் முடிவுசெய்யப்படவில்லை. 

ஆனால், இதைத் துணிந்து கையில் எடுத்திருக்கிறார்கள் மாணவர்கள். ஆண் - பெண் உரையாடல், பாலியல் அறியாமை, தவறானப் புரிதல் ஆகியவற்றைக் களைவதற்காக, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியைச் சேர்ந்த முதுகலை தொடர்பியல் துறை மாணவர்கள், ‘பாலியல் பயில்’ என்ற பெயரில் விழிப்புஉணர்வுப் பிரசாரத்தை நடத்தியிருக்கிறார்கள். 

“எங்கள் துறையில் ஒவ்வொரு வருடமும், ஒரு சமூக விழிப்புஉணர்வு நிகழ்வினை நடத்துவது முக்கியப் பாடம். இந்த வருடம் எந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்தோம். அதிகம் பேசப்படாத, ஒரு பிரச்னையைக் கையிலெடுக்க முடிவு செய்தோம். இங்கு பாலியல் கல்வி குறித்த விழிப்புஉணர்வு மிகக்குறைவாக இருப்பது நம் அனைவருக்குமே தெரியும். பாலியல் குறித்த உரையாடல்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படுகின்றன; வெறுத்து ஒதுக்கப்படுகின்றன. எவ்வளவு தூரம் இது உரையாடல்களில் புறக்கணிக்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் தவறானப் புரிதலை ஏற்படுத்துகிறது. இதை எடுத்துச்செல்ல வேண்டியது நமது கடமை” என்கிறார்கள் இந்த மாணவர்கள். 

கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனியாக அவர்களுடைய பாலியல் ரீதியிலான பிரச்னைகள், பொதுவான சந்தேகங்கள், சுகாதாரம் குறித்த விழிப்பு உணர்வு வகுப்புகளை நான்கு நாள் பிரசார நிகழ்வில் எடுத்திருக்கிறார்கள். 

ஊடகங்கள், திரைப்படங்கள் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும், சுய இன்பம் என்பது உடல் தேவையைத் தீர்த்துகொள்வதற்கான ஒரு வழிதானே தவிர, அது எந்த வகையிலும் தவறு கிடையாது என்று ஆழமான விவாதங்களைக் கல்லூரிகளிலும், எலியாட்ஸ் கடற்கரையிலும் நடத்தி இருக்கிறார்கள். போர்னோகிராபி குறித்த அமர்வின்போது, வாட்ச் போர்ன் (Watch porn) என்று தொடங்கியதும், சிரிப்புச் சத்தமும் சலசலப்பும் கிண்டல்களும் எழுந்தன. அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருக்கும் Child pornography குறித்தும், அவை எப்படி வன்முறையை மையமாக்கி இயங்குகின்றன என்றும் சொல்லியபோது, அங்கே மாபெரும் அமைதி நிலவியது. 

“உங்க கல்யாண ஃபோட்டோல நான் ஏன் இல்ல?” என்று கேட்டு நச்சரிக்கும் குழந்தையை திட்டிவிட்டுப் போகும் தந்தையிலிருந்து தொடங்கும் இவர்களின் நாடகம், நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகளோடு சேர்ந்து, சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

பாலியல் பயில்“ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான ஆழமான சிலபஸுடன் ஒவ்வொரு அமர்வும் நடத்தப்பட்டது. உதாரணமாக, பெண்களுக்கு மாதவிடாயில் உள்ள சிக்கல்கள், சுகாதாரம் போன்றவை பற்றிக் கூடுதலாக பேசினோம். நாங்கள் நடத்திய தெருக்கூத்தில், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிப் பேசினோம். நம் ஊரில் குழந்தை ஹாசினி, பஞ்சாபில் நடந்த சம்பவம் என நாம் பார்த்த, கேள்விப்பட்ட சம்பவங்களை மையப்படுத்தி தெருக்கூத்தின் கதைகள் இருந்தன. இதை ஒரு வார நிகழ்வாக நடத்தியிருக்க வேண்டும் என்று நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்” என்கிறார், முதுகலை தொடர்பியல் துறை இறுதியாண்டு மாணவி ஐஸ்வர்யா. 

பாலியல் பயில்“முதலில் பள்ளிக் குழந்தைகளிடம்தான் இந்த விழிப்புஉணர்வு பிரசார நிகழ்வை கொண்டுசெல்ல திட்டமிட்டோம். ஆனால், பள்ளிகளில் அனுமதி கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தது. எனவே, கல்லூரிகளைத் தேர்வுசெய்தோம்” என்கிறார் தொடர்பியல் துறை மாணவர், சுப்ரஜா ப்ரசாத். 

அடுத்து, பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற அமர்வுகளுக்கான முயற்சியிலும் இறங்கியுள்ளனர். இன்றைய காலத்தின் கட்டாயமான, ஆனால், எல்லோரும் பேசத் தயங்கும் ஒரு தலைப்பை, இளைஞர்கள் கையில் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இதுபோன்ற விழிப்புஉணர்வு நிகழ்வுகள் அதிகமாக வேண்டும். அரசும் இந்த விஷயத்தில் மிகத் திடமாக இறங்கி, பாலியல் கல்விக்கான திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்