வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (26/09/2017)

கடைசி தொடர்பு:00:00 (26/09/2017)

தமிழக அமைச்சர் மீது புகார் தெரிவிக்க ஆட்சியர் அலுவலகம் வந்த மாணவன்!

தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் மீது புகார் தெரிவிக்க கல்லூரி மாணவர் ஒருவர் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.

''தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணனுக்குச் சொந்தமான வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தேன். நான் ஏழை தாழ்த்தப்பட்ட மாணவன். அம்மா திடீரென இறந்துட்டாங்க. அதனால் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. அதனால் கல்லூரியில் மாற்றுச் சான்றிதழ் (டி.சி.,) கேட்டேன். அமைச்சர் கருப்பண்ணன் '’ஒரு லட்சம் கொடுத்துட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்கிட்டு போ'' என்கிறார் என மாணவர் ஒருவர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

இதுகுறித்து மாணவர் பிரகாஷ் விரிவாகக் கூறுகையில், '' ஈரோடு மாவட்டம் அரசலூர் அருகே உள்ள கஸ்பாபேட்டை கிராமத்தில் குடியிருக்கிறோம். அப்பா மூட்டை தூக்கும் தொழிலாளி. அம்மா கூலி வேலைக்கு போயிட்டு இருந்தாங்க. தங்கை கெளதமி அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறாள். நான் கோபிச்செட்டிப்பாளையம், ஒத்தகுதிரை பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல்ஸ் துறையில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அம்மா திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்துட்டாங்க. அப்பாவுக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் வேலைக்குப் போக முடியவில்லை.
அதனால் நான் பாலிடெக்னிக் போவதை நிறுத்திவிட்டு துணிக்கடைக்கு வேலைக்கு போயிட்டு இருக்கிறேன். மாதம் 4,000 தருகிறார்கள். அந்த பணத்தை வைத்துதான் குடும்பம் நடத்திக்கொண்டு தங்கையையும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். நான்  துணிக்கடைக்கு வேலைக்கு போகாமல் கல்லூரி போனால் என் தங்கையும் படிக்க முடியாது, அப்பாவும் சாப்பிட முடியாது. குடும்பமே கேள்விக் குறியாகி விடும் என்பதால் என் படிப்பை நிறுத்திவிட்டேன்.

கல்லூரியில் மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வாங்கி வைத்துக்கொண்டால் பிற்காலத்தில் வாய்ப்புக் கிடைத்தால் தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிக்கலாம் என்பதால், நான் படித்த வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் சென்று கல்லூரி முதல்வரிடம் மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) கேட்டேன். ’ஒரு லட்சம் கொடுத்துவிட்டு டி.சி. வாங்கிக்கொள்’ என்றார். நான் என் நிலைமையை சொல்லி அழுதேன். ’இந்தக் கல்லூரி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் உடையது. அவரிடம் போய் கேட்டுப்பார்’ என்றார். அதனால் அமைச்சர் கருப்பண்ணனிடம் போய்க் கேட்டேன். அவர் ’ஒரு லட்சம் கொடுத்துவிட்டு டி.சி. வாங்கிக் கொள்' என்றார். அதையடுத்து எங்கள் ஊரில் உள்ள நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த லோகு அண்ணாவுடன் சேர்ந்து அமைச்சரைச் சந்தித்தோம். அப்போது 45,000 ரூபாய் கொடுக்கச் சொல்லிக் கேட்டார். பணம் இருந்தால் படித்திருப்பேன். ஆனால், சாப்பிட்டுக்கே வழி இல்லாததால் தான் தற்போது டி.சி கேட்கிறேன். தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து டி.சி பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிக்கை வைக்க வந்துள்ளேன்’ என்றார்.

இதுகுறித்து ’நாம் தமிழர் கட்சி’யின் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிச் செயலாளர் லோகுபிரகாஷ் கூறும்போது, ''படிக்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு சாதாரணமானவர்களே படிக்க உதவும் இந்தக் காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ஒருவர் இதுமாதிரியான சூழலில் அம்மாணவனை இலவசமாகவே படிக்க வைக்க முன்வர வேண்டும். ஆனால், ஒரு அமைச்சரே ஒரு லட்சம், 45 ஆயிரம் என பணம் கேட்கிறார். அவரைத்தான் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துள்ளோம்’ என்றார்.