வெளியிடப்பட்ட நேரம்: 22:21 (25/09/2017)

கடைசி தொடர்பு:22:21 (25/09/2017)

அரவக்குறிச்சியைத் துரத்தும் சென்டிமென்ட்...செந்தில் பாலாஜி வீட்டு ரெய்டுக்கு இப்படி ஒரு காரணமா?

                  செந்தில் பாலாஜி

"குறுகிய காலத்தில் அரசியலில் உச்சத்துக்குப்போன செந்தில்பாலாஜி, அதே வேகத்தில் முறைகேடாகச் சொத்துகளையும் சேர்த்தார். அதனால், அதே வேகத்தில் வீழ்ச்சிப் பள்ளத்தில் தொபுக்கடீர் என்று குப்புற விழுந்துவிட்டார். இனி, அவர் எழுவது கடினமே" என்று அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் கரூர் மக்கள்.

தற்போது டி.டி.வி.தினகரன் அணியில் அங்கம் வகித்துவரும் செந்தில்பாலாஜி, அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை வழங்குவதற்காகப் பெற்ற நான்கரை கோடி ரூபாய், தற்போது மோசடி வழக்காக அவர்மீது பதிவாகியிருக்கிறது.

இந்தச் சூழலில்தான் கரூரில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள், கம்பெனிகளில் கடந்த 21-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை  வருமானவரித் துறை ரெய்டு நடத்தியுள்ளது. இதன்மூலம் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத சொத்துகளுக்கான ஆவணங்களையும், பணத்தையும் கத்தைகத்தையாகக் காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு போயிருக்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள்.

இதுவரை தமிழகத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர்கள் வீடுகளில்கூட இப்படி நான்கு நாள்கள் ரெய்டு நடத்தப்பட்டதில்லை. ஆனால், செந்தில்பாலாஜி வகையறாக்களுக்குச் சொந்தமான இடங்களில் நான்கு நாள்கள் ரெய்டு நடத்தி அதிரவைத்திருக்கிறார்கள். அதுவும்,செந்தில்பாலாஜி நேரடியாகச் சம்பந்தப்பட்ட இடங்களில் இன்னும் ரெய்டு நடத்தப்படவில்லை. செந்தில்பாலாஜியின் இத்தகைய வீழ்வுக்குக் காரணம் அவரின் பணத்தாசைதான் என்றாலும், நம்மிடம் கரூர் மாவட்ட அ.தி.மு.க முக்கியப் புள்ளி ஒருவர் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது.
 

"செந்தில்பாலாஜி அளவுக்கு அதிகமான பணத்தாசை, பதவியாசையால் இப்படி அரசியலில் வீழ்ந்திருக்கிறார் என்றாலும், அரவக்குறிச்சி தொகுதியின் பேட் சென்டிமென்ட்தான் அவரை அரசியலில் செல்லாக்காசாக்க முனைந்திருக்கிறது. இவர் மட்டுமல்ல, 1972-ல் இருந்து இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக ஜெயித்த புள்ளிகள் இப்போது அரசியலில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள். அரவக்குறிச்சி தொகுதியில் 1972-ல் இருந்து 1977 வரை அ.தி.மு.க கட்சியோடு கூட்டணிவைத்த இந்திய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஜாபர், எம்.எல்.ஏ-வாகி நன்றாகச் செயல்பட்டார். ஆனால், இந்தத் தொகுதியின் துர்ராசி, அதன்பிறகு அவரை அரசியலில் மேலே உயரவிடாமல் தடுத்துவிட்டது. அதேபோல், 1977 - 1980 காலகட்டத்தில் இந்தத் தொகுதியில் தனிசெல்வாக்குக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் எம்.எல்.ஏ-வாக ஜெயித்ததோடு தொகுதிக்கும் பல நன்மைகளைச் செய்தார். ஆனால், மீண்டும் ஒருமுறை எம்.எல்.ஏ-வாக இருந்ததோடு சரி. அதன்பிறகு அவரும் அரசியலில் காணாமல் போய்விட்டார். அடுத்து, 1984 - 1987 வரை அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆரே பாராட்டும் அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்ட அவரும்  இந்தத் தொகுதியின் பேட் சென்டிமென்டால் அரசியலிலிருந்து காணாமல் போய்விட்டார். அதேமாதிரி, 1991 - 1996 காலகட்டத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மரியமுல் ஆசியா என்பவர் எம்.எல்.ஏ ஆனார். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிடித்த எம்.எல்.ஏ-வாகத் துடிப்பாகச் செயல்பட்ட இவர், அரசியலில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அவரும் அரசியலில் இப்போது போன இடம் தெரியவில்லை.

இதுமாதிரி 1996 - 2001 வரை இந்தத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் நின்று வெற்றிபெற்றார். அவரும் பவர்ஃபுல் எம்.எல்.ஏ-வாகச் செயல்பட்டார். கட்சியிலும் செல்வாக்குடன் இருந்தார். ஆனால், அரவக்குறிச்சி தொகுதியின் மோசமான ராசி, அவரையும் காவு வாங்கி அரசியலில் செல்லாக்காசாக்கியது. அதன்பிறகு, 2001 - 2006 வரை அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த லியாவுதீன் சேட்டும், இப்போது அ.தி.மு.க-விலும் இல்லை... அரசியலிலும் இல்லை. 2006 - 2011வரை  இந்திய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த தி.மு.க கூட்டணியில் நின்று ஜெயித்த கலிலூர் ரஹ்மான், இப்போது அரசியலில் மட்டுமல்ல, எந்த ஊரில் இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாத நிலைமை. அதேபோல், 2011-ல் இருந்து 2016 வரை தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.சி.பழனிச்சாமி, மறுமுறை செந்தில்பாலாஜியிடம் தோற்றபிறகு அரசியலில் துறவறம் பூண்ட நிலைக்கு வந்துவிட்டார். இந்தச் சூழலில்தான், தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருக்கும் செந்தில்பாலாஜிக்கு ரெய்டு, பணமோசடி எனச் சரிவுக்கான தேடல் ஆரம்பமாகியிருக்கிறது. அவருடைய உறவினர்கள், நண்பர்கள் இடங்களில் ரெய்டு நடந்ததையடுத்து அவரது அரசியல் வீழ்ச்சிக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது. இனி அவர் அரசியலில் செல்லாக்காசுதான். காரணம். அரவக்குறிச்சித் தொகுதியின் பேட் சென்டிமென்ட்தான்" என்று முடித்தார்.                  


டிரெண்டிங் @ விகடன்