வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (26/09/2017)

கடைசி தொடர்பு:10:19 (26/09/2017)

''பஸ் ஸ்டிரைக் இல்லை..!'' அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.1200 வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

மாநிலப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு இம்மாதம் முதல் மாதந்தோறும் இடைக்கால நிவாரணமாக 1, 200 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் 47 தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், சங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், ''இடைக்கால நிவாரணத்தொகை வழங்குவது குறித்து டிசம்பர் 9-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போக்குவரத்துக் கழகங்களின் பிரச்னைகள் குறித்து தீர்வு ஏற்பட்ட பின், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும்'' என்று தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்க பிரதிநிதிகள், ''வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும்; தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைத் திருப்பி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7000 கோடி எப்போது தரப்படும் என்பது குறித்து தெளிவாக தீர்மானம் செய்யப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தின. ஆனாலும் அமைச்சர் அறிவித்த இடைக்கால நிவாரணத் தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. இதையடுத்து, பண்டிகை காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க