ஏ.வி.எம்.கால்வாய் திட்டம்..! கண்டு கொள்ளுமா தமிழக அரசு | Will government take concern about AVM canal plan

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (26/09/2017)

கடைசி தொடர்பு:10:15 (26/09/2017)

ஏ.வி.எம்.கால்வாய் திட்டம்..! கண்டு கொள்ளுமா தமிழக அரசு

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அதிகமான ஆறுகளைக் கொண்ட இந்தியாவில் இதுவரை நீர் வழிப்போக்குவரத்து பயன்படாமல் இருக்கிறது. அதுபோலதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம்.கால்வாய் திட்டம். அனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய் என்பதின்  சுருக்கமே ஏ.வி.எம்.,கால்வாய். இந்தக் கால்வாயின் முக்கிய நோக்கம், மன்னர் கால திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், தென் திருவிதாங்கூரின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைப்பது மற்றும் கடல்நீர் உட்புகுவதை தடுப்பதுதான். இது உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மாவினால் 1860-ல் தொடங்கப்பட்டது.


மன்னரும் 1860-ல் இறந்துவிட அவரது வாரிசு மன்னரான ஆயில்யம் திருநாள் ராமவர்மா, இப்பணியைத் தொடர்ந்து செய்துள்ளார். இதன் முதல் கட்டமாக பூவாரிலிருந்து தேங்காப்பட்டணம் தாமிரபரணி நீர்த்தேக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பிப்ரவரி மாதம் போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கால்வாய் குளச்சல் - மண்டைக்காடு கோயில் வளாகம் வரை வெட்டப்பட்டது. 1867-ல் இத்திட்டம் பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது கேரளாவின் வர்க்கலை கால்வாய் பணி தொடங்கிவிட்டதால் ஏ.வி.எம். கால்வாய் பணியை திருவிதாங்கூர் அரசு நிறுத்திவிட்டது. இருப்பினும் இந்தக் கால்வாயின் தேவையையும் முக்கியத்துவத்தையும் திருவிதாங்கூர்அரசு உணர்ந்திருந்தது. கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலும் அங்கிருந்து கொல்லம் வரையிலும், அங்கிருந்து கொச்சி வரையிலும் நீர்வழிப் போக்குவரத்துக்காகவே ஏ.வி.எம் திட்டத்தை திருவிதாங்கூர் மன்னர்கள் தொடங்கியிருந்தனர். 


இந்தத் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இன்று குமரி மாவட்டத்தில் உருவாகியுள்ள போக்குவரத்து நெருக்கடியை, இந்த நீர்வழிப் போக்குவரத்து வசதி இலகுவாக தீர்த்து வைத்திருக்கும். இது தவிர சுற்றுலாத்துறையும் மேம்பட்டிருக்கும். போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கவும் நின்றுபோன இந்த ஏ.வி.எம். கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்கி, கால்வாயைத் தொடர்ந்து வெட்டி கன்னியாகுமரி வரை கொண்டு செல்ல வேண்டும். தேவைப்பட்டால் இந்தக் கால்வாயை கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடமான காயல்பட்டிணம் வரையும் நீட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு என்று நீர்வழிப் போக்குவரத்து ஆர்வலர்கள் சொல்கின்றனர். ஏ.வி.எம். கால்வாயை தேங்காப்பட்டணத்திலிருந்து மீண்டும் அகலமாக வெட்டி மணக்குடி வரை நீட்ட வேண்டும்.
இந்தக் கால்வாயை மீண்டும் வெட்டுவதன் மூலம் கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரையில் நீர்வழிப் போக்குவரத்து அதிகரித்து மாவட்டத்தில் தரைவழிப் போக்குவரத்து நெரிசல் பெருவாரியாக குறையும். இதனால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். சுற்றுலா வாய்ப்பு அதிகரித்துப் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன. ஏ.வி.எம்.கால்வாய் நீர்வழிப் போக்குவரத்து இன்று திருவனந்தபுரம் வரை நன்றாக உள்ளது. தேங்காப்பட்டணத்திலிருந்து குளச்சல் வரை நன்றாக இல்லை. தூர்வாராமல் போட்டுப் பலரும் ஆக்கிரமித்து விட்டனர். ஏ.வி.எம்.கால்வாயைத் தூர்வாரி சீர்படுத்தி பயன் பாட்டுக்குக் கொண்டு வந்தால் நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவதைத் தடுத்து நிறுத்தி நன்னீர் விவசாயத்தை வளரச் செய்ய முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க