வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (26/09/2017)

கடைசி தொடர்பு:11:00 (26/09/2017)

'பாகிஸ்தான்மீது மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன் நடத்தப்படும்' - ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை!

எல்லையில் பாகிஸ்தான் தொல்லை நீடித்தால் மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன் நடத்தப்படும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் - இராணுவத் தளபதி பிபின் ராவத்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய எல்லைக் கோட்டை கடந்து பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் பேசும்போது, "பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில வாரங்களாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைக் கடந்து அத்துமீறித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதற்கு நமது ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் எப்போதும் தயார் நிலையில்தான் உள்ளது. பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளின் மீது, அவசியம் ஏற்பட்டால் மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்படும்" என்றார். முன்னர் கடந்த 2016-ம் அண்டு செப்டம்பர் 28 மற்றும் 29-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன் நடத்தி 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.