பிரபல கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ரன்வீர் சிங் | ranveer singh will act as a famous cricketer in biography film

வெளியிடப்பட்ட நேரம்: 05:06 (26/09/2017)

கடைசி தொடர்பு:10:58 (26/09/2017)

பிரபல கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ரன்வீர் சிங்

சினிமாவும் கிரிக்கெட் விளையாட்டும் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்துவரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளிவந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, 'மாஸ்டர் ப்ளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவந்தது.

ரன்வீர் சிங்

இதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்தவரும், 'ஹரியானா ஹரிக்கேன்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான கபில் தேவின் வாழ்க்கை வரலாறு படமாக இயக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் கபூர் பெயர் அடிபட்டது. ஆனால், இன்று வெளியாகியுள்ள செய்தியில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை கபிர் கான் இயக்கவிருக்கிறார். 

ரன்வீர் சிங்  

 இதன் அதிகாரபூர்வ அறிவிப்பாக, தரன் ஆதர்ஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார். படத்திற்கு 1983 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் 'பத்மாவதி' படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு, கபில் தேவ் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பினால் ரன்வீர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க