“டெங்குவை ஒரு வாரத்தில் கட்டுப்படுத்துவோம்!” சுகாதாரத்துறை அமைச்சரின் பேட்டியும் உண்மை நிலவரமும் | Dangerous civilian deaths due to dengue fever... The government is suffering from illness

வெளியிடப்பட்ட நேரம்: 08:37 (26/09/2017)

கடைசி தொடர்பு:16:25 (26/09/2017)

“டெங்குவை ஒரு வாரத்தில் கட்டுப்படுத்துவோம்!” சுகாதாரத்துறை அமைச்சரின் பேட்டியும் உண்மை நிலவரமும்

                                                  டெங்கு பாதித்த மக்கள் பகுதியில் மந்திரி விஜயபாஸ்கர்

ரோக்கியத்தை மேம்படுத்தவேண்டிய சுகாதாரத் துறை சீக்காளித் துறையாக மாறிக் கிடக்கிறது. டெங்குக் காய்ச்சலில் இருந்து தப்பிக்க எல்லாவிதமான தற்காப்புக் கேடயங்களையும் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். கை-கால்களில் கொசு விரட்டி மருந்துகளைத் தடவிக்கொள்கிறார்கள்; தேங்காயெண்ணெய் தடவிக்கொள்கிறார்கள்; மண்தரையே இல்லாமல் போய்விட்ட பெருநகர மண்தொட்டிகளில் நொச்சி இலைச்செடி வளர்க்கிறார்கள். இப்படிப் பல முயற்சிகளை  மக்கள் மேற்கொண்டாலும்,  மிக இயல்பாய் கொசு, அவர்களைக் கடித்துவிட்டுப் பறந்துவிடுகிறது. 'தமிழக மக்களைப் பொறுத்தவரை அவர்களால் எதையும் எதிர்கொள்ள முடியும்'  என்று உலக சுகாதார அமைப்பே முடிவு செய்துவிடும் போலிருக்கிறது. 12 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் தேவையுள்ள இடத்தில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மட்டுமே, தமிழகச்  சுகாதாரத் துறையில் பணியாற்றுகின்றனர் என்பது கூடுதல் வேதனையைத் தருகிற செய்தியாகும். 

இத்தனை நோய்கள், மாற்றியே பேசாத மந்திரிகள்

கொள்ளை நோய், மலேரியா, பறவைக் காய்ச்சல், சார்ஸ், சிக்குன்குனியா, எபோலா, பன்றிக் காய்ச்சல், மஞ்சள்காமாலை, யானைக்கால், மூளைக்காய்ச்சல்,  பெரியம்மை, சின்னம்மை, போலியோ, பிளேக், ஸ்பானிஷ் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நோய்களை மக்கள் எதிர்கொண்டுதான் வருகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கடந்த 2012-ம் ஆண்டில் டெங்குக் காய்ச்சலின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது.  இன்றைய அதே அ.தி.மு.க-தான் அன்றும் ஆட்சியில் இருந்தது. அன்றைய தமிழக சுகாதாரத் துறை மந்திரியாக இருந்த  விஜய், அந்த மாவட்டங்களுக்கு நேரில் போனார்.  ''தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் ஒருவாரத்தில் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்'' என்று  2012, ஜூன் 3-ம்தேதி ஊடகங்களுக்குப் பேட்டியும் கொடுத்தார். ஐந்தாண்டு கழிந்த நிலையில், கொஞ்சமும் மாறாமல் அதே சாயலில் அதே சுகாதாரத் துறையின் இப்போதைய மந்திரி  பேட்டி தருகிறார்.  2017, ஆகஸ்ட் 9-ம் தேதி அவர் அளித்த பேட்டியில், ''டெங்குவை ஒரே வாரத்தில் விரட்டிவிடுவோம்'' என்றார்.  இந்தப் பேட்டிகளில், ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டும்தான் காலம் கவனித்து வைத்துள்ளது. அன்றிருந்த மந்திரி விஜய். இன்றிருப்பவர் அதே பெயரில் கொஞ்சம் நீண்டுள்ள விஜயபாஸ்கர், அவ்வளவே!

ட்விட்டரில்  கண்டித்த கமலஹாசன்

மந்திரி விஜயபாஸ்கர், டெங்குக் கொசுவை எச்சரித்த ஒருவாரக் கணக்கு, கொசுவிடம் தோற்று 45-வது நாள்கள் முடிந்து விட்டன. சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவர் பார்கவ், 'டெங்குக் காய்ச்சல்' கொடூரத்தால் பரிதாபமாக இறந்திருக்கிறார். வளர்ப்போரின் ஆசைக்கு ஏற்றபடி, சந்தோஷ வார்த்தையைத் திரும்பத்திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்போல மக்களிடம், மந்திரிகள் பேசி வருவதையே இந்தப் பேட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன. மாணவர் பார்கவ் உயிரிழப்பைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அதில், "செவிடர்களுக்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். டெங்கு மரணம் தவிர்க்க, ஆவணம் செய்யா அரசு அகல வேண்டும். அரசு தூங்குகிறது, பெற்றோர் விழித்திருங்கள். இனி, காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலைப் பெறாது அமைதியாகக் கூடாது"  என்று கொதித்திருக்கிறார்.

கடந்த  ஜூலை 20-ம் தேதி கமல்ஹாசனின் மகள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோதே இதேபோல் ட்விட்டரில்  கமல் பதிவு போட்டிருந்தார்.  "பள்ளிப் படிப்பை முடிக்காத எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை. டெங்குக் காய்ச்சல் புரியும். டெங்குவால் என் மகள் இறப்பின் விளிம்புவரை சென்று மீண்டுள்ளார். டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்குவைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் விலகிக்கொள்ளலாம்" என்று அரசை விலகச் சொல்லியே நேரடியாக ட்விட் செய்திருந்தார் கமல்ஹாசன். அவருடைய கோபத்துக்குப் பின்னால் உள்ள நியாயங்களை ஆராயாமல் அவர்மீது பாய ஆரம்பித்துவிட்டனர், ஆட்சியாளர்கள். 

அடுத்தடுத்து அட்மிட்

                                             டெங்கு பாதிப்பில் நோயாளிகள்

“தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் சுகாதாரத் துறைப் பணியாளர்கள்,  3 ஆயிரத்து 500 ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள், 265 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன'' என்கிறார், சுகாதாரத் துறை அமைச்சர்.  ஐந்து பேருக்கு அதிகமானோர் டெங்கு தாக்கி இறந்த பகுதி 'ஏ' பிரிவு. அதற்கும் குறைவான உயிரிழப்பு என்றால் 'பி'பிரிவு. அதற்கும் குறைவான உயிரிழப்பு என்றால் 'சி' பிரிவு என்று சமூக விரோதிகளைத் தரம் பிரிப்பதுபோல் கொசுவைப் பிரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது சுகாதாரத் துறை.கடந்த வாரங்களில் மட்டும், சென்னை ஐ.ஐ.டி. மாணவர்  பிரேம் அவினாஷ்,  திருவள்ளூர் மாவட்டம் இரண்டாம் வகுப்பு மாணவி ஆலிஷ் எத்தில்டா,  சென்னை ஆயுதப்படை காவலர்கள் பார்த்திபன், யோகராஜ், விபசாரத் தடுப்புப் பிரிவுக் காவலர் ஷிபு, பட்டாலியன் காவலர் சக்திவேல் ஆகியோர் தொடர் காய்ச்சலால்,  அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். எஞ்சியிருக்கும் போலீஸாரை, 'டெங்கு' தாக்காமல் இருக்க, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போலீஸாருக்கு 'நிலவேம்புக் கஷாயம்' கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார். இப்படிப் பலர் களம் இறங்கிவிட்டனர். அரசு இறங்கியதா என்பதுதான் கேள்விக்குறி.

டெங்கு பாதிப்பும், கோர்ட் பதிலும்...

                                          கொசுக்கள் உற்பத்தி கூடம் 

தானேஷ் லஷ்தன் என்பவர்,  "நாடு முழுவதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசுக்குக் கோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்தார்.  நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு,வழக்கைத் தள்ளுபடி செய்தது. பின்னர்  நீதிபதிகள், "நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, 'வீட்டில் கொசு, ஈ உள்ளது. அதனை விரட்டுங்கள்' எனக் கூற முடியாது. நீங்கள் கேட்பதைக் கடவுள்தான் செய்ய முடியும். கடவுள் மட்டுமே செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் அல்ல"  என்று தெரிவித்தனர்.  கொசுவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோர்ட்டின் கதவுகளைத் தட்டுகிற அளவுக்கு நிலைமை கைமீறிப் போய்விட்டது.

சுகாதாரத்துறையில் ஆள் பற்றாக்குறை !

சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை உயர் அலுவலர் ஒருவரிடம், ''டெங்குவை ஒழிக்க முடியுமா'' என்றபோது, "கொசுக்களை நம்மால் முழுமையாக ஒழிக்க முடிகிறதோ, இல்லையோ... 90 சதவிகித கொசுக்களையாவது நம்மால் ஒழிக்க முடியும். கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து பொதுமக்களைப் பாதுகாக்க முடியும். அதை ஆய்வுசெய்து கண்டுபிடிக்கவும், மருந்துகொடுக்கவும், பிறருக்கு எச்சரிக்கை தரவும் போதிய ஆள்கள் சுகாதாரத் துறையில் இல்லை. நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கக்கூடிய வல்லமை கொண்டவர்கள் சுகாதார ஆய்வாளர்கள்தான்.

உலக சுகாதார நிறுவனம் அறிவித்தபடி பல்நோக்குச் சுகாதாரப் பணியாளர் திட்டத்தின்மூலம் ஐந்தாயிரம் மக்கள்தொகை கொண்ட ஒரு துணை சுகாதார நிலையத்துக்கு, எத்தனை சுகாதார ஆய்வாளர்கள் தேவை என்பதுபற்றி வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், மஸ்தூர் பணிகளுக்கும் ஆள்களின் எண்ணிக்கை சொல்லப்பட்டுள்ளது. இவைகள் யாவும்  தமிழகத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றன.இந்தப் பணியிடங்களை முழுமையாக்கிப் பொதுச் சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை மூலம் உரிய கட்டமைப்பை அரசு உருவாக்கிக் கொடுத்தால் இரண்டே ஆண்டுகளில் அனைத்துத் தொற்றுநோய்களுக்கும் தீர்வுகாணலாம். பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வை  ஏற்படுத்தி டெங்கு, சிக்குன்குனியா போன்ற பெயர்களையே மறக்கடித்துவிடலாம். சுகாதார ஆய்வாளர்களின் கடுமையான முயற்சியினால்தான்  பெரிய அம்மை, நரம்பு சிலந்தி போன்ற நோய்கள் கடந்த இருபதாண்டுக் காலங்களில் முற்றாக விரட்டியடிக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு என்ற கணக்கில்தான் சுகாதாரத் துறையில் பணியாளர்கள் பணியில் உள்ளனர். முழுமையாகப் பணியில் இருப்பது டெங்குக் கொசுக்கள்தான்" என்றார், வேதனையுடன்.

இணைந்த கைகளால் என்ன பயன்?

ஓ.பி.எஸ். அணியின் அவைத் தலைவரான மதுசூதனன் தலைமையில் குடிநீர்ப் பற்றாக்குறை, டெங்குக் காய்ச்சலுக்குத் தீர்வு போன்றவைகளை முன்வைத்து கடந்த மாதம் சென்னையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆளும் கட்சியை எதிர்த்து அதே கட்சியின் இன்னோர் அணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் இது. டெங்குக் கொசு ஒழிப்பில் தீர்வு கிடைப்பதற்குள், அணிகள் இணைப்புக்குத் தீர்வு வந்துவிட்டதால், மர்மக் காய்ச்சலுக்குப் பதில் இல்லாமல் போய்விட்டது.


டிரெண்டிங் @ விகடன்