அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்த்தீர்களா? அமைச்சர் செல்லூர் ராஜு தடாலடி பதில்

நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்தோம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் சசிகலாவைத் தவிர வேறு யாரும் உடனிருந்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொன்னையன் உள்ளிட்ட பலர் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் மரணம் தற்போது வரை மர்மமாகவே இருந்து வருகிறது.

இதனிடையே, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவைப் பார்க்கவிடவில்லை என்றும் அவர் இட்லி, உப்புமா சாப்பிட்டார் எனப் பொய் சொன்னதாகவும் கூறி பரபரப்பை உண்டாக்கினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு நேற்று அமைத்தது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதாவைப் பார்க்கவிடவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார். நீங்கள் ஜெயலலிதாவைப் பார்த்தீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதாவைப் பார்த்தது உண்மைதான் என்று தடாலடியாகக் கூறினார். மேலும் அவர், நம்ம எந்த இடத்தில் இருக்கிறோம். இது அரசு நிகழ்ச்சி. இங்கு வந்து அரசியல் பேசுகிறீர்களே என்று கோபப்பட்டார்.

செய்தியாளர்கள் விடாமல் அவரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர். அப்போது ஒரு செய்தியாளர், கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், சிறந்த நடிகரான கமல்ஹாசன் தேவையற்ற கருத்துகளைப் பகிர்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கட்சி ஆரம்பித்த பிறகு ஒரு கட்சியை விமர்சிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!