Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வறுமையில் வாடுகிறேன் வழி சொல்லுங்கள்... கால்களை இழந்த மாரியம்மாள் பரிதவிப்பு!

ஒரு விபத்தில் தன் அக்காவையும் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த மாரியம்மாள், ஜவுளிக்கடைக்கு வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவர் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், விபத்து இழப்பீடு தொகை பெறுவதற்கான சட்ட ஆலோசனை வேண்டும் என்றும் பரிதவித்து வருகிறார்.

இந்நிலையில் மாரியம்மாளிடம் பேசியபோது, ''எங்கப்பா பெரியசாமி. அம்மா தனலட்சுமி. அவங்களுக்கு அக்காள் பெரியம்மாள், நான் மாரியம்மாள், தம்பிகள் ஐயப்பன், முனியப்பன் என நான்கு பேரு இருந்தோம். எங்களுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் உடையாப்பட்டி. ஆனால், நாங்கள் குடும்பத்தோடு மும்பையில் இருந்தோம். நான் மும்பை பர்லா பகுதியில் பிறந்து வளர்ந்தேன்.
எங்க அப்பாவும் அம்மாவும் மற்றும் உறவினர்கள் எல்லோரும் மும்பையில் சுமைதூக்கும் கூலிவேலை செய்து வாழ்ந்துட்டு இருந்தோம். மும்பையில் எங்களுக்கு வீடு, வாசல் கிடையாது. பகல் நேரத்தில் வேலை செய்வோம். இரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் குடும்பம் குடும்பமாகப் படுத்துத் தூங்குவோம். கஸ்டப்பட்டாலும் சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருந்தோம்.

அப்போ எங்க அக்காவுக்கு 12 வயசும் எனக்கு 10 வயசும் இருக்கும்போது ஒரு நாள் இரவு மும்பை பர்லா பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தோம். வேகமாக வந்த ஒரு மண் லாரி தூங்கிக்கொண்டிருந்த எங்கள்மீது விட்டுவிட்டார்கள். அனைவரும் அலரி அடித்து துடித்துக் கத்தினோம். ரத்த வெள்ளத்தில் என் அக்கா, பெரியம்மாள், என் அம்மாவின் அக்காள், அவரின் வீட்டுக்காரர் உறவினரின் பெண் என சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்துவிட்டார்கள்.

இதில் என்னுடைய இரண்டு கால்களும் முட்டிக்குமேல் துண்டாகித் தனித்தனியே கிடந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த என்னையும் என் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு போய் பர்லா அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால், கால்களை ஒட்டி வைக்க முடியவில்லை. அம்மாவுக்கு இடுப்பு எலும்பு உடைந்துவிட்டது. என் தம்பிகளுக்கும் சிறுசிறு காயங்கள் குடும்பமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தோம்.

அதன் பிறகு, அப்பா இறந்தவுடன் எங்க சொந்த ஊரான சேலம் உடையாப்பட்டிக்கே வந்துவிட்டோம். அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை. தம்பிகள் ரெண்டு பேரும் கொத்து வேலைக்குப் போயிட்டு இருக்கிறார்கள். விபத்து 10 வயதில் நடந்தது. தற்போது எனக்கு 29 வயதாகிறது. இந்த 19 வருடமாக இரண்டு கால்களும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். கால்கள் இழந்த நிலையிலும் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து அயோத்தியாப்பட்டணத்துக்கு ஜவுளிக்கடைக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.

அந்த விபத்தால் அக்காவை இழந்து, என் இரண்டு கால்களை இழந்து அம்மா, தம்பிகள் அடிப்பட்டு பெரிய பாதிப்புள்ளானோம். ஆனால், இது நாள் வரை எங்களுக்கு இழப்பீடாக 5 பைசாகூட யாரும் கொடுக்கவில்லை. அதனால் ரொம்ப வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறோம். இழப்பீடு பெறுவதற்கான சட்ட ஆலோசனை யாராவது செய்தால் நன்றாக இருக்கும்'' என்று கண்கலங்கினார்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement