வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (26/09/2017)

கடைசி தொடர்பு:17:15 (26/09/2017)

அப்போலோ வாசலில்தான் உட்கார்ந்திருந்தேன்; ஒருநாள்கூட ஜெ.வை பார்க்கவில்லை! வெற்றிவேல் ஓப்பன் டாக்

அப்போலோ மருத்துவமனைக்குள் நாங்கள் வெளியே சேர் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். ஒருநாள் கூட மருத்துவமனைக்குள் சென்றது கிடையாது என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பரபரப்புக்கு மத்தியில் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உங்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். வரும் 4-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. பழனிசாமி தரப்பினர் செய்ததை தூள்தூளாக்க நீதிமன்றத்தை அணுகுவோம்.

ஜெயக்குமார் உள்ளிட்ட பலரின் ரகசியம் உங்களிடம் இருப்பதாக சொன்னீர்களே?

எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லி அதற்கும் ஒரு விசாரணை கமிஷன் வைக்கச்சொல்லுங்க. அப்போது அந்த டேப்பை அங்கு கொடுத்துவிடுகிறேன்.

தமிழகத்தில் அடுத்தடுத்து தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். தற்போது கமல்ஹாசன் அதிரடியாக பல அறிவிப்புகளை வெளியிடுகிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கமல்ஹாசனுக்கு நம்பிக்கையிருக்கிறது அதனால் அவர் வெளியிடுகிறார். மக்களிடம் செல்லும்போதுதான் யார் தலைவர் என்று அடையாளம் காட்ட முடியும்.

ரிசார்ட்டில் இருக்கக்கூடியவர்கள் எப்போது வெளியே வருவார்கள்?

Waiting for Court. நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கண்டிப்பாக வருவார்கள்.

அவர்களை நீங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடலாமே?

அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் ஒன்றாகத்தான் இருப்போம் என்கிறார்கள். இந்த அரசு எத்தனை பேர் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் மீது பொய் வழக்கு இந்த அரசு போட்டுள்ளது. பின்னர் இவர்களுக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.

அரசாங்கத்துக்கு பயந்துதான் இருக்கிறீர்களா?

பயமெல்லாம் கிடையாது. அவர்கள் விரிக்கிற வலையில் மாட்டக்கூடாது என்பதற்காகத்தான்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் குறிப்பிட்ட காலத்தில் முடிவடையுமா?

குறிப்பிட்ட காலக்கெடு வைத்துவிட்டு விசாரணையை முடித்துவிட வேண்டும். ஒழுங்காக சென்றுகொண்டிருந்த நிலையில் திருச்சி நீதிமன்றம் ஆட்சியாளர்களை பைத்தியம் பிடிக்க வைத்துவிட்டது. இதை திசைத் திருப்புவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் போன்ற சாப்பாட்டு ராமன்களைவிட்டு இதுபோன்ற பிரச்னையை தேவையில்லாமல் கிளப்பிவிட்டார்கள். அதுவும் ஒரு வருடம் கழித்து. இதில் சம்பந்தமே இல்லாமல் பேட்டிக்கொடுக்கிறார்கள். நாங்கள் ஒருநாள் கூட மருத்துவமனைக்குள் செல்லவில்லை. ஐசியூவில் நின்றுகொண்டுவிட்டு நான் என்ன சொல்லப்போகிறேன். தொண்டர்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான். நான் அம்மாவை பார்த்துவிட்டு வந்தேன் என்று பொய் சொல்லணும். நாங்கள் வெளியே சேர் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். ஒருநாள் கூட அப்போலோ மருத்துவமனைக்குள் சென்றது கிடையாது. ஜெயலலிதாவை பார்த்ததும் கிடையாது. அமைச்சர்கள் பொய் பேசுகிறார்கள் என்றால் விசாரணை கமிஷன்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, தீபக் பற்றி எதுவும் கேள்வி இருக்கிறதா? என்று வெற்றிவேல் கேட்க, ஆமா இருக்கிறது என்று செய்தியாளர்கள் சொன்னதும், முக்கியமா அதை விட்டுட்டீங்களே என்றார். இதையடுத்து செய்தியாளர்கள், தீபக்கின் கருத்து முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. சில கருத்துகள் ஏற்புடையதாக இருக்கிறது. உங்களுடைய பார்வையில் தீபக் பேட்டி எப்படி இருந்தது?

ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக். அதைத் தாண்டி எங்களுக்கு அவருடன் எந்த உறவும் கிடையாது. தீபக் கருத்து நீங்கள் சொன்னமாதிரி முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. அவருக்கு அரசியலில் வரணும் என்று ஆசை இருந்திருக்கும். அது நிறைவேறாமல் போயிருக்கும். இதனால் சசிகலா மீது பழி சுமத்துகிறார். ஜெயலலிதா எந்த நிலையிலும் தீபக்கை அனுமதித்தது கிடையாது.

எடப்பாடி அணியுடன் தீபா சேரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதைப்பற்றி...

ரொம்ப நன்றி. எடப்பாடி அணி மூழ்கும் கப்பல்.