வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (26/09/2017)

கடைசி தொடர்பு:19:40 (26/09/2017)

'சிறுவர்களுக்கு அலகு குத்தி நேர்த்திக்கடன்': தமிழக அரசு பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!

சிறுவர்கள்

ஜெயலலிதா உடல்நிலை குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில், அவருக்காக அ.தி.மு.க. தொண்டர்கள் பலரும் தினம்தோறும் பல்வேறு பூஜைகள், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். மண் சோறு சாப்பிடுவது, அலகு குத்துவது உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் செய்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சில மாதங்களுக்குத் தொடர்ந்த இதுபோன்ற நேர்த்திக் கடன்களால் தமிழகம் முழுக்க பரபரப்பான சூழல் நிலவியது.

அத்தகையச் சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி மாணவர்கள் பலருக்கும் வலுக்கட்டாயமாக அலகு குத்தப்பட்டதாக புகார் எழுந்தது. ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் இருந்து தண்டையார்பேட்டைக்கு 20 சிறுவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்த வற்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இச்செயல் மனித உரிமைகளுக்கு எதிரான செயல் எனவும், சிறுவர்களை இவ்வாறு செய்ய வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், சிறுவர்களுக்கு அலகு குத்தப்பட்ட விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்து இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனத் தெரிகிறது.