வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (26/09/2017)

கடைசி தொடர்பு:17:12 (23/07/2018)

ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் டெங்கு பாதிப்பால் இன்று உயிரிழந்தார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சந்தோஷ் (10). பரமக்குடி அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் சிறுவன் சந்தோஷுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சந்தோஷ், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

டெங்கு காய்ச்சலுக்கு பலியான மாணவன் சந்தோஷ்
மருத்துவர்கள் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக கூறியதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அந்த தனியார் மருத்துவமனையில் சந்தோஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை பலனளிக்காத நிலையில், சிறுவன் சந்தோஷ் இன்று உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளிச் சிறுவன் பலியான சம்பவத்தால், பாண்டியூர் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக எடுக்க வேண்டும் எனவும் பாண்டியூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க