தேனியில் வீடு தேடி வரும் சரக்கு! - கண்டுகொள்ளாத காவல் துறையின் அலட்சியம் | The condition of police force in Theni is pathetic.

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/09/2017)

கடைசி தொடர்பு:19:00 (26/09/2017)

தேனியில் வீடு தேடி வரும் சரக்கு! - கண்டுகொள்ளாத காவல் துறையின் அலட்சியம்

தேனி

கிட்டத்தட்ட ஒரு படத்தை இயக்குவது போலத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது தேனி மாவட்டக் காவல் துறை. ஆனால், அது ஆக்‌ஷன் படம். பொதுவாக மக்களின் பாதுகாவலராக, அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பவராகத்தான் ஒரு காவலர் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு எதிராகத்தான் அனைத்துச் சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றை வரிசையாகப் பார்க்கலாம்.

ரூல்ஸ் பேசினால் அடி!

தேனி மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் நிரஞ்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது. நண்பரோடு இரு சக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, தேனி ஆனந்தம் சில்க்ஸ் அருகே எஸ்.ஐ அமுதனால் நிறுத்தப்படுகிறார். ‘'தலையில் ஹெல்மெட்டை அணியாமல் கையில் வைத்திருக்கிறாய். அபராதம் கட்டிவிட்டுச் செல்'’ என்று கூறியிருக்கிறார். ''தான் மருத்துவக் கல்லூரி மாணவர் என்றும், அவசரத்தில் மறந்துவிட்டேன்'' என்றும் கூறியிருக்கிறார் நிரஞ்சன். ‘'நீயெல்லாம் டாக்டர் ஆகி என்னத்த கிழிக்கப்போற'’ என்று கூறிக்கொண்டே நிரஞ்சன் பையில் இருந்த 100 ரூபாயைப் பறித்துக்கொண்டுள்ளார் எஸ்.ஐ அமுதன். எடுத்த பணத்துக்கு ரசீது கேட்டிருக்கிறார் நிரஞ்சன். ‘'என்னிடமே ரூல்ஸ் பேசுறியா நீ'’ என்று சொல்லி நிரஞ்சனை ஓங்கிக் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இச்சம்பவத்தால் மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க, மாவட்டக் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் இதுதொடர்பாகக் கேட்டபோது, ''எஸ்.ஐ. அமுதன், அந்த மாணவரை அடிக்கவே இல்லை'' என்று சொல்லித் திகில் கிளப்பினார்.

மீடியாமீது திட்டமிட்டுத் தாக்குதல்!

தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கிணறு பஞ்சாயத்து, உலகம் அறிந்த விஷயம். அதற்குக் காரணம், இடைவிடாது லெட்சுமிபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டங்களை மக்கள்முன் எடுத்துவைத்த ஊடகத்தினர்தான். மக்களின் போராட்டத்தில், ஒருநாள் போலீஸார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைக்கிறார்கள். அப்போது பெண்கள் ஊருக்குள் சென்றுவிட, அவர்களை வேண்டுமென்றே துரத்திச் சென்று லத்தியால் அடித்து விரட்டுகிறார் பெரியகுளம் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த். இச்சம்பவத்தைக் காணும் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அதை வீடியோ எடுக்கிறார். அதைக் கண்டு பதறிப்போன முத்து பிரேம்சந்த், ''யார்டா நீ'' என்றவாறு ஒளிப்பதிவாளரைச் சரமாரியாக அடித்துள்ளார். நிலைகுலைந்த ஒளிப்பதிவாளர், தனது அடையாள அட்டையை எடுத்து அவரிடம் காட்டியுள்ளார். ''பத்திரிகைக்காரன் என்றால் பெரிய வெண்ணையா'' என்று சொன்னது மட்டுமல்லாமல், அடையாள அட்டையைப் பிடிங்கிக்கொண்டு மீண்டும் அடித்துத் துவைத்து ஒரு குற்றவாளிபோல போலீஸ் வாகனத்தில் ஏற்றியிருக்கிறார். இதை அறிந்த சக பத்திரிகையாளர்கள், முத்து பிரேம்சந்தின் செயலைக் கண்டித்து ஒளிப்பதிவாளரை மீட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளரின் புகார் கிடப்பில் போடப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆண்டிப்பட்டி மற்றும் கம்பத்தில் இதேபோன்ற செயல்களில் முத்து பிரேம்சந்த் ஈடுபட்டிருக்கிறார் என அவர்கள் சொல்கிறார்கள். 

ஏட்டு 'ஏட்டு வந்தால் ஜாலிதான்!''

தேனி மாவட்டத்தின் க்ரைம் பிரிவு எப்பவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியது. ஆனால், சமீபகாலமாக மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு ஏட்டு ஒருவரே காரணம் என்கிறார்கள் காவல் துறை வட்டாரத்தினர். அந்த ஏட்டுக்கு ஒரு சிறப்பு இருக்கிறதாம். ஒருமுறை, தேனி முழுவதும் தொடர்கொள்ளைகளில் ஈடுபட்ட ஒரு திருடன் பிடிபடுகிறான். அவனிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்படுகின்றன. ''தன்னை விட்டுவிடும் படியும் அதற்காக கமிஷன் கொடுக்கிறேன்'' என்றும் கூறுகிறார். டீலை ஓகே செய்த ஏட்டு, அதை மேல் அதிகாரிகளுக்குக் கொண்டுசெல்கிறார். அவர்களும் டீலை ஓகே செய்ய, திருடன் விடுவிக்கப்படுகிறான். மீட்கப்பட்ட நகை இருக்க... விடுவிக்கப்பட்ட திருடனுக்காகப் பல வருடங்களுக்குமுன் சின்ன திருட்டுச் சம்பவம் ஒன்றில் கைதான மதுரையைச் சேர்ந்த பழ வியாபாரியை அதிரடியாக கைதுசெய்கிறது காவல் துறை. பழ வியாபாரி நியாயம் கேட்க நீதிமன்றம் செல்கிறார். விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. முடிவில்,  தவறான உள்நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், உண்மையான குற்றவாளியைத் தப்பவிடவே இவர்மீது வழக்குப் பதியப்பட்டது எனவும் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய, தேனி மாவட்டக் காவல் துறையைக் கடுமையாக விமர்சித்தது நீதிமன்றம். சம்பவம் செய்த ஏட்டு, க்ரைமில் இருந்து மாற்றப்படுகிறார். குற்றங்கள் குறைந்தன. தற்போது மீண்டும் க்ரைமில் காலடி எடுத்துவைத்திருக்கிறார். ஏட்டு வந்ததால் திருடர்கள் வேட்டு வெடித்துக் கொண்டாடுகிறார்களாம்.

வீட்டுக்கே வரும் மதுபானங்கள்!

மூடப்பட்ட பெரும்பாலான மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட சூழலில், புதுப்பொலிவுடன் தேனி சின்னமனூரில், `மொபைல் டாஸ்மார்க்` எனும் அதிரடி வியாபாரம் தொடங்கியுள்ளது. அதென்ன மொபைல் டாஸ்மாக் என்கிறீர்களா? வீட்டில் இருந்துகொண்டு குறிப்பிட்ட அந்த மொபைல் நம்பருக்குப் போன்செய்து, 'என்ன சரக்கு வேண்டும், எங்கு வந்து கொடுக்க வேண்டும்' என்ற விபரத்தைக் கூறிவிட்டால் போதும். வீட்டுக்கே வந்து டெலிவரி செய்துவிடுவார்கள். அட… நல்லா இருக்கே… என்று எண்ண வேண்டாம். வீட்டுக்கே வந்து டெலிவரி செய்பவர்கள், பெட்ரோல் சார்ஜ், டிராவல் சார்ஜ், டாஸ்மாக்கில் கூட்டத்தில் நின்று சரக்கு வாங்கிய சார்ஜ் எனப் பல சார்ஜ்களைப் போட்டுப் பணம் பறிப்பார்கள். இப்படிப் பல சம்பவங்கள் நடக்க, இதை மாவட்டக் கண்காணிப்பாளரிடம் கொண்டுசென்றோம். ''நீங்கள் சொல்வதுபோல எந்தச் சம்பவமும் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை'' என்றார். 

சினிமாவை மிஞ்சும் இப்படியான சம்பவங்கள் இன்றும் சின்னமனூரில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கால் செய்யலாம்... கட்டிங் வாங்கலாம்.

தங்கதமிழ்செல்வன், ஓ.பி.எஸ்

ஏன் இவ்வளவு சம்பவங்கள்?

இதுவரை நாம் பார்த்த தேனி மாவட்டக் காவல் துறை சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மிகக்குறைவுதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. காவல் துறையில் ஏன் இந்தக் குழப்பம்... ஏன் இவ்வளவு மெத்தனம் போன்ற கேள்விகளுக்கு விடை தேடியபோது சில அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் தெரியவந்தன. தேனி மாவட்டத்தில் இரண்டு போலீஸ் குழுக்கள் இருக்கின்றனவாம். ஒன்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம் குழு. மற்றொன்று, டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வன் குழு. டி.எஸ்.பி-க்கள், ஏ.டி.எஸ்.பி-க்கள் மட்டத்தில் பன்னீர்செல்வத்தின் குழுவாகவும், எஸ்.ஐ இன்ஸ்பெக்டர்கள் மட்டத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் குழுவாகவும் பிரிந்துகிடப்பதால்தான் பல குற்றச் சம்பவங்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் தங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்தும், சுயநலமாகவும் நடந்துகொள்வதால் மக்களின் நலனும், பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாம். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், இந்த இரண்டு குழுக்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறாராம். தவறு செய்யும் அதிகாரிகள் கண்முன் இருந்தும் நடவடிக்கை எடுக்க முடியாமல் கையைப் பிசைந்துகொள்கிறாராம். இதை மெய்ப்பிக்கும் விதமாக, கடந்த 19-ம் தேதி மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டி.எஸ்.பி மற்றும் ஏ.டி.எஸ்.பி-க்கள் வந்திருந்தனர். அதேசமயம், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஒருவரையும் காண முடியவில்லை.

அரசியலில்தான் பன்னீரும், தங்க.தமிழ்ச்செல்வனும் எதிர்துருவங்களாக நின்றுகொண்டு மக்கள் பணி செய்யாமல் சுய லாபத்துக்காக உலாவருகிறார்கள் என்றால், மக்கள் பாதுகாவலர்கள் என்ற அதிகாரத்தில் இருக்கும் காவல் துறையும் இப்படி டீம் பிரித்துக்கொண்டு தங்களுக்குள் அரசியல் செய்வது எந்தவிதத்தில் நியாயம்? இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் பேசியபோது, "காவல்துறையில் பன்னீர்செல்வமோ, தங்கத்தமிழ்ச்செல்வமோ தலையிட முடியாது. நாங்கள் தலையிடவும் விட மாட்டோம்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்