அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: உயிரிழப்பைத் தடுக்க அரசின் நடவடிக்கை என்ன? | Death due to dengue fever increases; TN govt's action to avoid dengue deaths

வெளியிடப்பட்ட நேரம்: 20:07 (26/09/2017)

கடைசி தொடர்பு:20:07 (26/09/2017)

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: உயிரிழப்பைத் தடுக்க அரசின் நடவடிக்கை என்ன?

டெங்கு தாக்குதல்

மிழகத்தில் நாளுக்குநாள் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த காய்ச்சலால்  உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தவேண்டிய பணிகளில் ஈடுபட வேண்டிய மாநில அரசோ, தங்களின் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக டெல்லிக்குக் காவடி தூக்கிக் கொண்டிருக்கிறது.  

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பெயர்களில் தொற்றுநோய் அல்லது காய்ச்சல் மக்களைத் தாக்கி, அந்நோய் பாதிப்புகளால் பலர் உயிரிழக்கும் நிலை தொடர்கதையாகிவிட்டது. டெங்குநோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஒரே வாரத்தில் இந்நோயை விரட்டி விடுவோம் என்றும் இப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எப்போதெல்லாம் டெங்குவால் பாதிப்பு என்று செய்திகள் வருகின்றனவோ அப்போதெல்லாம், 'முற்றிலுமாக டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என்று அதே கருத்தைக் கூறுவது வாடிக்கையாகி விட்டது. சில தருணங்களில் டெங்குகாய்ச்சல் பாதிப்பின் வீரியம் தெரியாமலேயே போய்விடும். டெங்குவைரஸ் தாக்கி, அது வீரியமடைந்த பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வரும்போது, காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. 

இந்நிலையில், "டெங்குகாய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் இந்நோய் தாக்குதலின் வீரியம் அதிகரிப்பது எதனால்? இந்நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?" என்பது பற்றி சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் சைலஜாவிடம் பேசினோம்.

"டெங்குகாய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸைப் பரப்பும் கொசுக்கள், பொதுவாக நன்னீரிலேயே முட்டையிட்டு உற்பத்தியாகின்றன என்பதை நாம் அறிவோம். 'ஏடிஸ் ஏஜிப்தி' (Aedes aegypti) என்ற பெயரிலான இந்தவகை கொசுக்கள், பெரும்பாலும்  பகலில்தான் மனிதர்களைக் கடிக்கக்கூடியவை. டெங்குநோயைப் பரப்பக்கூடிய வைரஸ் ஃப்ளேவி (Flavi virus) எனப்படுவதுடன், அவற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நான்குவகையாகப் பிரிக்கப்படுகின்றன.

டெங்குகாய்ச்சல் அறிகுறிகள்!

டெங்கு கொசுக்கள் பின் மண்டையில் வலி, முழங்கால், கை, கால், இடுப்பில் கடுமையான வலியுடன் கூடிய அதிக வெப்பநிலையுடன் காய்ச்சல் ஏற்பட்டால் அது டெங்குவாக இருக்கக்கூடும். காய்ச்சல் ஏற்படும் தொடக்கத்திலேயே 102 அல்லது 103 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு காய்ச்சல் இருக்கும். கடுமையான உடல்வலியுடன் மிகுந்த சோர்வும் ஏற்படும். நான்கு முதல் ஐந்து நாள்கள் வரை கடுமையான காய்ச்சல் நீடிக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உருவாகும் வலியைப் போன்ற பாதிப்பு உருவானால், டெங்குகாய்ச்சலுக்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

அப்படி பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து, டெங்கு வைரஸ் தாக்குதலை உறுதிசெய்த பின், அதற்கேற்ப நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய நிலவேம்பு கசாயத்தை உடனடியாக வழங்கி, பருகச் செய்தல் வேண்டும்.

டெங்கு வைரஸ் முதலில் தாக்குவது ரத்தத்தில் உள்ள பிளேட் எனப்படும் ரத்தத்தகடுகளைத்தான். இந்த பிளேட்டுகள்தான் உடலுக்கு எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடியவை. அவை தாக்கப்படும்போது, உடல்சோர்வு தானாகவே ஏற்படும். உடலில் உள்ள நீர்ச்சத்துகள் வெளியேறி பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

கட்டுப்படுத்துவது எப்படி?

சாதாரண காய்ச்சல் என்றால், ஓரிருநாளில் குணமாகிவிடும். ஆனால், டெங்குகாய்ச்சல் தாக்கியவர்களுக்கு விட்டு விட்டு காய்ச்சல் வரும். குறைந்தது நான்கு அல்லது ஐந்து நாள்கள்வரை காய்ச்சல் தொடருமானால், உடனடியாக ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம். பரிசோதனையில் டெங்குவைரஸ் 'பாசிட்டிவ்' என்று வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதே முக்கியப் பணி. டெங்கு பாதிப்பு காரணமாக, உடலில் உள்ள நீர்ச்சத்து முற்றிலுமாக வெளியேறி, உடல் சோர்வு ஏற்படுவதால், அதைப்போக்க உடனடியாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு குளுகோஸ் ஏற்றுதல் அவசியம்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு, நில வேம்புக் கசாயம், பப்பாளிச்சாறு போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே, தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் கசாயம் வழங்க உத்தரவிடப்பட்டு, டெங்கு பாதிப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுமருந்துகளுக்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன" என்றார்.

சென்னையில் பள்ளி மாணவர், காவல்துறை அதிகாரியின் மகன் என்று டெங்குநோய்க்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையிலேயே டெங்கு பரவும் சூழல் உள்ள இடங்கள் எவையென்பதைக் கண்டறிந்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை அரசுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உண்டு. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதே இந்த நேரத்தில் ஆட்சியாளர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். மாறாக, உண்மை நிலையை மறைக்கப்பார்ப்பது, மக்களுக்கு இந்த அரசின் மீதான அதிருப்தியை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

டெங்குகாய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கும்போது, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் எவரும் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்