Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிதைந்த முகம்... வற்றாத காதல்... விலகிடாத நேசம்! #TrueloveStory

னிதர்களின் வயதுக்கேற்ப உடல்ரீதியில் இயற்கையாக வெளிப்படக்கூடிய உணர்வுகளையே நாம் அன்பு, அக்கறை, காதல், ஆசை என வகைப்படுத்துகிறோம். இளம் பருவத்தில் வரக்கூடிய அந்தக் காதல் எனும் உணர்வு, குறிப்பிட்ட வயதோடு முடிந்துபோகக்கூடியதல்ல. அதே சமயம் பெரும்பாலான காதல், திருமணத்தில் முடிவதுமில்லை.

Being You

Credits : BeingYou

அன்பை ஆத்மார்த்தமாகப் பரிமாறிக்கொள்ளும் 'காதல்' எனும் உணர்வு, மனிதனை மட்டுமல்ல உலக உயிர்கள் அனைத்திலும் புதைந்துள்ளது. காதல் செய்ய ஒருவரை ஒருவர் புரிந்துவைத்திருந்தால் போதுமானது.  ஆனால், விரும்பியவரையே கல்யாணம் செய்துகொள்ள பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.  அன்பினால் மட்டுமே அடையாளம் காணக்கூடிய காதலுக்கு கட்டுப்படாத சமூகம் இது. பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறமை இல்லையென்றால்,  காதல்கள் கரையேறாமலேயே போய்விடக்கூடும். வரையறுத்த முடிவில் உறுதியுடன் இருத்தலும், வற்றாத காதலும்தான் வாழப்போகும் வாழ்க்கைக்கான தடத்தை அமைத்துக்கொடுக்கும்!

டீன் ஏஜ் காதலில்கூட உண்மைக் காதல் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், உண்மைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.17 வயதில் தொடங்கிய (2004ம் ஆண்டு) காதல் 2014-ம் ஆண்டுதான் திருமணத்தில் முடிந்தது. இத்தனைக்கும்  காதலி விபத்தில் சிக்கி மறுஜென்மம் எடுத்திருந்தார். தன் தோழிக்கு மீண்டும் உயிர் கொடுத்து, வாழ்க்கைத் துணையாக கரம் கோத்த பிறகே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார் அந்த இளைஞர். அவர்தான், பெங்களுருவைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்.

இவருக்கும் பள்ளிப் பருவத் தோழியான சுனிதாவுக்கும் படிக்கும்போதே விருப்பம். காதலைத் தெரிவித்துக்கொண்டதில்லை. இருவரும் பிரிந்தும் சென்றுவிட்டனர். சுனிதா, கோவையில் வசித்து வந்தார். ஜெயபிரகாஷுக்கு சுனிதா மீது கட்டுக்கடங்கா காதல். பிரிந்தாலும் அவ்வப்போது தொடர்புகொள்வார்கள். பெரியதாக பேசிக்கொள்ள மாட்டார்கள். பரஸ்பரம் நலம் மட்டுமே விசாரித்துக்கொள்வார்கள். அத்துடன் பேச்சு முடிந்துபோகும். 

2011-ம் ஆண்டில் இருவருக்கும் பொதுவான நண்பர், ஜெயபிரகாஷை தொலைபேசியில் அழைத்து `சுனிதா விபத்தில் சிக்கியுள்ளார். என்னவென்று தெரியவில்லை. உடனே போய்ப் பார் ' எனக் கூறியுள்ளார். துடித்துப்போனார் ஜெயபிரகாஷ். அலறியடித்துக்கொண்டு கோவைக்கு ஓடினார். அங்கே, சுனிதாவின் கோலம் கண்டு விக்கித்துப்போனார். சிதைந்துபோன முகம், மழுங்கிய தலை, சுருங்கிப்போன கண்கள் என சுனிதா உருக்குலைந்து கிடந்தார். கோலவிழிப் பார்வையால் ஜெயப்பிரகாஷின் மனதை கொள்ளைகொண்ட சுனிதாவை, ஒரு விபத்து அலங்கோலமாக்கிவிட்டது.

சுனிதாவின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயபிரகாஷ், வேதனையின் உச்சத்தில் இருந்தார் . பிறகு, காலத்தின் கட்டளையை கடவுளும் மறுக்க முடியாது என்பதை உணர்ந்த ஜெயபிரகாஷ், தன்னைத்தானே தேற்றிக்கொண்டார். அதே சமயம் `காதலியைவிட்டு விலகிவிடாதே' என்று மட்டும் அவரின் உள்மனம் சொன்னது. சுனிதா மீதான ஜெயபிரகாஷின் காதல், முன்பைவிட பல மடங்கு இப்போது அதிகரித்திருந்தது. கஷ்ட காலத்தில்தான் உண்மைக் காதலைத் தெரிந்துகொள்ள முடியும் என்பார்கள். ஜெயபிரகாஷ், உண்மையான காதலராக இருந்தார். அந்தக் கணத்திலேயே சுனிதாவை கரம் பற்றவும் முடிவெடுத்தார். 

அன்றைய தினமே சுனிதாவை அணுகி, ''நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்'' என்று சொல்ல, சுனிதா எந்தப் பதிலும் சொல்லவில்லை.. சின்னப் புன்சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது. அதன் பிறகு, சுனிதாவைவிட்டு ஜெயபிரகாஷ் பிரியவே இல்லை. இரு வருடங்கள் தன் பக்கத்திலேயே வைத்து, குழந்தைபோல பார்த்துக்கொண்டார்.  பல சிகிச்சைகளுக்குப் பிறகு, சுனிதா ஓரளவுக்கு உடல் நலம் தேறினார். அற்காகவே ஜெயபிரகாஷ் லட்சக்கணக்கில் பணம் செலவழித்தார். இரு வருடங்கள் கழித்து 2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதியின் மகிழ்ச்சியான இல்வாழ்க்கைக்கான இனிய சான்றாக அத்மியா, அத்மிக் என இரு குழந்தைகள் பிறந்தனர்.

இந்தக் காலத்தில் உண்மைக் காதல் இருக்கிறதா..?' எனக் கேட்பவர்களுக்கு, ஜெயபிரகாஷின் கதைதான் பதில். சுனிதா மீதான காதல், அவரைத் திருமணம் செய்துகொண்டவிதம் குறித்து ஜெயபிரகாஷ், 'பீயிங் யூ' ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 32 ஆயிரம் பேர் அவரின் பதிவை ஷேர் செய்திருந்தனர். ஒன்றரை லட்சம் பேர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 'மன அழகை விரும்பும் மனிதர்களுள் நீங்களும் ஒருவர். இப்போதைக்கு இந்த அன்புதான் உலகத்துக்குத் தேவை. இத்தகைய நேசத்தை உலகம் முழுக்கப் பரப்பவேண்டும்' எனச் சொன்னது ஒரு வாழ்த்து!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement