Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனி ஒரு நபரால் ஒரு கிராமத்தின் கல்வியே கேள்விக்குறியாகிறதா?

'தனி ஒரு நபரின் சுயநலத்தால் எங்கள் கிராமத்தின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது’ எனப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள். மக்கள் இணைந்து நடத்தும் இப்போராட்டத்தை முன்னெடுப்பதே அப்பள்ளி மாணவர்கள்தான்.

பல கிராமத்தில் பள்ளிக்கூடங்கள் இல்லையென்று மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் எங்கள் ஊரில் நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டு பள்ளி விரிவாக்கம் செய்வதற்காகக் கட்டடம் கட்டினால் எங்க ஊரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் உயர் நீதிமன்றம் சென்று பள்ளிக் கட்டடம் கட்டுவதற்குத் தடை ஆணை பெற்று வருகிறார். இதனால் குழந்தைகளின் உயர்கல்வி தடைபடும் என்கிறார்கள் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.

இதுகுறித்து இப்பள்ளியின் முன்னாள் மாணவர் அண்ணாதுரை, ''ஈரோடு மாவட்டம் பவானி, வைரமங்கலம் அடுத்த குட்டிப்பாளையத்தில் சுமார் 60 ஆண்டுகளாக குட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தில் உள்ள கரை எல்லபாளையம், பச்சாகவுண்டன்புதூர், வைரமங்கலம், கரட்டுப்பாளையம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய குழந்தைகள் சுமார் 164 பேர் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளி 2012-ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது.

இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்ட பிறகும் போதிய கட்டட வசதி, பெண் குழந்தைகளுக்கான கழிப்பிட வசதி, ஆய்வுக் கூடம், விளையாட்டு மைதானம் என எந்த ஓர் அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்து வந்தது. இப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அதிகாரியிடம்  பலமுறை முறையிட்டோம். அதையடுத்து கடந்த 25.1.2016 அன்று  அப்பள்ளிக்கு பின்புறத்தில் இருந்த 85 சென்ட் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை அப்பள்ளியுடன் சேர்த்து அந்த இடத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அப்பள்ளியின் அருகே உள்ள லோகநாதன் என்பவர் குறிப்பிட்ட சிலரைச் சேர்ந்துக்கொண்டு பள்ளிக் கட்டடத்தைத் தடுத்து நிறுத்தியதோடு அந்த இடத்தில் கற்களை நட்டு ’160 ஆண்டுகளாக இங்கு பாவடி நெய்துகொண்டிருக்கிறோம்’ என்று பொய் சொல்லி பவானி உரிமையியல் நீதிமன்றத்தில் தடை ஆணை கேட்டு வழக்கு தொடுத்தார். ஆனால், நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தடை ஆணை வாங்கி வந்துவிட்டார்.

இதனால் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் உயர்கல்வி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட உள்ளது. நடுநிலைப் பள்ளியை அடுத்து உயர்நிலைப்பள்ளி செல்ல வேண்டு என்றால் 8 கி.மீட்டர் தூரத்தில் உள்ள கவுந்தம்பாடி அல்லது மேட்டுப்பாளையம்தான் போக வேண்டும். பெண் குழந்தைகளை அவ்வளவு தூரம் அனுப்ப மாட்டார்கள். இதனால் பெண் குழந்தைகளின் கல்வி தடைபடும். ஒரு தனிமனிதரும் அவரோடு சிலரும் செய்யும் அராஜகத்தால் குழந்தைகளின் கல்வி தடைபடுகிறது'' என்றார்.

அப்பள்ளியில் பயிலும் மாணவி பாரதி, ''நான் அப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். 8-ம் வகுப்பு முடித்த பிறகு இப்பள்ளியிலேயே 9, 10-ம் வகுப்பு படிக்க வாய்ப்பு இருந்தால் என்னைப் படிக்க வைப்பார்கள். இல்லையென்றால் படிக்க வைக்க மாட்டார்கள். அதனால் கண்டிப்பாக இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாறியதோடு மட்டும் நிற்காமல் அதற்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதைத் தடுப்பவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement