இக்கட்டான நிலையில் நடராஜன்...பரோலுக்காகத் தவிக்கும் சசிகலா!

நடராஜன்

“உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் ம.நடராசனை சந்திக்க சசிகலா பரோலில் வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் நடராஜன்

அ.தி.மு.க-வின் பவர் சென்டராக இருந்த சசிகலா குடும்பத்தின் முக்கிய நபராக விளங்கியவர் ம.நடராசன். அ.தி.மு.க என்ற கட்சியை தனது மனைவி மூலம் பலநேரங்களில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். ஒருகட்டத்தில் சசிகலாவுக்கும் இவருக்கும் மனவருத்தம் ஏற்பட்டு, இருவரும் விலகி இருந்தபோதும், குடும்பஉறவுகள் மூலம் கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு இருந்த செல்வாக்கைத் தொடர்ந்து நிலைநாட்டிவந்தார். 

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தினர் கட்சியின் பொறுப்புகளில் வர முடிவெடுத்தபோது, அதன் பின்னணியில் இருந்து இயக்கியவர் நடராசன் என்று சொல்லப்பட்டது. ஒரு கட்டத்தில் சசிகலா முதல்வராக பதவியேற்கும் நிலையில் அந்தத் தகவல் பெசன்ட் நகர் வீட்டில் இருந்த நடராசனுக்கு சொல்லப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்ததால் நான்கு ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை சசிகலாவுக்கு ஏற்பட்டது. பெங்களூரு சிறைக்கு சசிகலா செல்லும் முன்பே பெங்களுரு சென்ற நடராசன், சசிகலாவை சிறைவாசல் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். மனைவி சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு கட்சி விவகாரங்களில் பெரிதாக தலைக்காட்டாமலே இருந்தார். அதோடு அவருக்கு கல்லீரலில் தொற்று ஏற்பட்டதால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கல்லீரலை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் உறுப்புதானம் பெற பதிவு செய்திருந்தார் நடராசன்.

அப்போலோவில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகு குற்றாலத்தில் ஓய்வில் இருந்த நடராசனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயல் இழந்துவருதால் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், கல்லீரலோடு, சிறுநீரகமும் நடராசனுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதால், வேறு சிறுநீரகமும் பொறுத்த வேண்டிய நிலை உள்ளது.

மனைவி பற்றி விசாரிக்கிறார்

இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது நடராசன் இருந்து வருகிறார். அவருடைய உறவினர்கள் பலரும் சந்தித்து வருகிறார்கள்.  அவர்களிடம் சசிகலா குறித்து கேட்டுள்ளார்.இந்தத் தகவல் சசிகலாவுக்குச் சொல்லப்பட்டது. அவரும் கணவரின் உடல்நிலை நினைத்து வருத்தப்பட்டுள்ளார். சசிகலா பரோலில் வந்து நடராசனைப் பார்க்க வேண்டும் என்று அவருடைய உறவுகள் சொல்லிவருகின்றனர்.  ஆனால், சசிகலா மீது சிறையில் விதிகளை மீறியதாக எழுந்த சர்ச்சை இருப்பதால் பரோல் வழங்க கர்நாடக சிறைத்துறை யோசனை செய்துவருகிறது.'

சசிகலா

இந்நிலையில்தான், சசிகலா சிறையில் இருந்து வருவதற்கு வாய்ப்பாக குளோபல் மருத்துவமனை, நடராஜன் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டது. இந்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டதே சசிகலாவின் பரோலுக்குத்தான் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் பரோலுக்கு சசிகலா விண்ணப்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில தினங்களில் நடராசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்புள்ளதால், அறுவை சிகிச்சை நடைபெறும் தினத்தன்று பரோலில் வர சசிகலா திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். சசிகலாவின் வழக்கறிஞர்கள் இதற்கான வேலையில் தீவிரம் காட்டிவருவதாகச் சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!