’டி.ஜி.பி. அறிக்கை’ - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை

தமிழக சிறப்புக் காவல் படையினர் தொடர்பாக டி.ஜி.பி. ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை துறைரீதியான வழக்கமான தகவல் தொடர்புதான் என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் உள்ள சிறப்புக் காவல்படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆணையிட்டதாக அறிக்கை ஒன்று ஊடகங்களில் வெளியானது. அந்த அறிக்கையால் தமிழகத்தில் ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படுமோ என்று கூறி பல்வேறு தகவல்களும், ஊகங்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. 

இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய கிராமங்களில் எரிவாயு எடுப்பது தொடர்பான போராட்டங்கள், நீட் போராட்டம், மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், எடப்பாடி - தினகரன் கோஷ்டி மோதல், பொதுக்கூட்டங்கள் என்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த சமயங்களில் உள்ளூரில் போலீஸுக்கு உதவி செய்ய பட்டாலியன் எனப்படும் இரும்புத்தொப்பி போலீஸ் படையை (தமிழகத்தில் 12 இடங்களில் பட்டாலியன் முகாம் உள்ளது) காவல்துறை மேலிடம் அனுப்பி வைக்கும். அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 19 மாவட்டங்களுக்குப் பட்டாலியன் படைப்பிரிவுகளிலிருந்து போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது சட்டம், ஒழுங்கு பிரச்னை பெரியதாக இல்லை என்பதால், முன்பு அனுப்பப்பட்டவர்களை மீண்டும் அந்தந்த தலைமையகத்துக்கு ரீ-கால் செய்வதற்காக ஓர் அறிக்கையை டி.ஜி.பி. அனுப்பி வைத்தார். அதன் நகல்தான் தற்போது வெளியாகியுள்ளது. தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு சமயங்களில் மீண்டும் இதேபோல பட்டாலியன்களை மாவட்டங்களுக்கு அனுப்புவார்கள். இது போலீஸ் நடைமுறையில் அடிக்கடி நடக்கும் தகவல் தொடர்பு விவகாரம். தற்போது கிளம்பியுள்ள வதந்திக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!