Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விலங்குகள் சரணாலயம், விவேகம், பிக் பாஸ் ஓவியா, டெங்கு விழிப்பு உணர்வு ஆசிரியையின் வித்தியாச கொலு!

கொலு

நவராத்திரி என்றதுமே கொலு பொம்மைகள்தான் எல்லோரின் நினைவுக்கு வரும். கொலு வைத்திருக்கும் வீடுகளில் பெரும்பாலும் வழக்கமான கொலு பொம்மைகளே வீற்றிருக்கும். சில வீட்டினர் ஏதேனும் வித்தியாசம் காட்ட முயல்வார்கள். அவர்களுக்கும் புதிய பொம்மைகளை வாங்கிதான் வைப்பார்கள். ஆனால், ஆசிரியை பவித்ரா நந்தகுமார் ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் தீம் எடுத்துக்கொண்டு அதை வெளிப்படுத்தும் விதத்தில் கொலு வைத்து வியக்கவைக்கிறார். அது இந்த ஆண்டும் தொடர்கிறது. ஆரணி, மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் பவித்ரா நந்தகுமார் தனது வீட்டு கொலு அனுபவங்களைப் பகிர்கிறார். 

"எங்கள் ஊரில் கொலு வைக்கிற வீடு எங்கே எனக் கேட்டால், கரெக்டாக எங்கள் வீட்டை அடையாளம் காட்டிடுவாங்க. அந்தளவுக்கு எங்க வீட்டு கொலுவை நினைவில் வைத்திருக்கிறார்கள். இப்படிக் கொலு வைக்கும் பழக்கம் பல தலைமுறைகளாக, கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது இந்தக் கொலுக் கொண்டாட்டம்.  ஒவ்வொரு வருஷமும் ஏதேனும் ஒரு விஷயத்தை மையப்படுத்திக் கொலு வைப்பேன். போன வருஷம், அதிகரித்து வரும் முதியோர் இல்லங்கள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் அதற்கு முந்தைய வருஷம் புத்தகங்கள் படிப்பது எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தியும் கொலு வைத்திருந்தேன். அவற்றைப் பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டுப் பாராட்டினார்கள்.  

கொலு

இந்த ஆண்டு என்ன செய்யலாம் என யோசித்து, 'மரம் நடுவோம்; மழை பெறுவோம்' என்பதை வலியுறுத்தலாம் எனத் திட்டமிட்டோம். அதற்காகப் பொம்மைகளைச் சேகரித்து, அவற்றைத் தயார் செய்வதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆயிற்று. இடையில் டெங்குக் காய்ச்சலால் பலரும் பாதிப்படைந்து வரும் செய்திகளைப் பார்த்ததும் அது குறித்த விழிப்பு உணர்வையும் சேர்த்து வைத்தோம். கொலு வரிசையை அடுக்க மதியம் ஆரம்பித்த வேலை, அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்குத்தான் முடிந்தது. ஆனாலும் பார்க்க வருபவர்கள் பாராட்டும்போது அதெல்லாம் மறந்துவிட்டது.

கொலு பார்க்கும்போது ரொம்ப சந்தோஷப் படுவது குழந்தைகள்தான். அதனால் அவர்களை ஈர்ப்பதற்காக ஃபன்னாகச் சில விஷயங்களைச் சேர்ப்போம். அந்த நேரத்தில் வரும் திரைப்படத்தின் போட்டோக்களை ஒட்டி, திரைப்படம் பார்ப்பதுபோலச் செய்வோம். இந்த ஆண்டு விவேகம் படத்தின் காட்சிகளை வைத்திருந்தோம். பசங்களும் அதைப் பார்க்க ஆர்வத்துடன் வருகிறார்கள். பெரியவர்களை ஈர்ப்பதற்காக பிக்பாஸ் நட்சத்திரங்கள் அணிவகுத்திருப்பதைப் போல தயார் செய்தோம். இவற்றைப் பார்க்க வருபவர்கள் நாங்கள் அமைத்துள்ள டெங்கு பற்றிய விஷயங்களையும் தெரிந்துகொள்வார்கள். 

கொலு

அதேபோல முதுமலை விலங்குகள் சரணலாயம் மாதிரியை அமைத்திருக்கிறோம். அதைக் கொலு பார்க்க வரும் குழந்தைகள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அதில் உள்ள விலங்குகளைப் போல சத்தம் எழுப்புவார்கள். 

இப்படியெல்லாம் வித்தியாசமாக ஏன் செய்கிறீர்கள் எனச் சிலர் கேட்பார்கள். நமது பண்பாட்டில் உள்ள நல்ல விஷயங்களை அடுத்தத் தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக, அவர்களை ஈர்க்க சில விஷயங்களைச் சேர்த்து வைக்கிறோம். அதற்கான முயற்சியாகத்தான் இவற்றைச் செய்கிறோம். கொலு பார்க்க வருபவர்களும் இதைச் சரியாகப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களும் சில விஷயங்களை ஷேர் பண்ணிப்பாங்க. இது ஒரு வகையில் வாழைப்பழத்தில் மாத்திரை வைத்து தருவதைப் போலத்தான். 

கொலு

ஏதேனும் காரணங்களால், ஒரு சில வருடங்கள் குறைவான எண்ணிக்கையில் கொலு வைத்துவிட்டால், வருபவர்கள் அது குறித்துக் கேட்குபோதுதான் எவ்வளவு தூரம் எங்கள் வீட்டுக் கொலுவை ரசிக்கக் காத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதுவே ஒவ்வோர் ஆண்டும். அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகளவில் கொலு வைப்பதற்கான உற்சாகத்தைத் தருகிறது." என்கிறார் பவித்ரா நந்தகுமார். 

மரபில் புதுமையைக் கலக்கும் ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement