கொடுமையைப் பார்த்து குலுங்கிச்சிரித்த பன்னீர்செல்வம், பழனிசாமி! நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல் | Doctor Ramadoss Request to take action against Edappadi Palanisamy, Panneerselvam

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (27/09/2017)

கடைசி தொடர்பு:13:38 (27/09/2017)

கொடுமையைப் பார்த்து குலுங்கிச்சிரித்த பன்னீர்செல்வம், பழனிசாமி! நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

ramadossஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, அலகு குத்தும்போது வலி தாங்க முடியாமல் குழந்தைகள் கதறித்துடித்தது, காண்போர் நெஞ்சைக் கணக்க வைத்தது என்றும்,  இந்தக் கொடுமையைப் பார்த்து குலுங்கிச்சிரித்த ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகளுக்கு அலகு குத்தப்பட்டதற்காக, தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம், இதற்குக் காரணமானோர்மீது வழக்குப் பதிவுசெய்யவும் ஆணையிட்டுள்ளது. ஆளுங்கட்சியினரின் அரக்கத்தனமான செயலுக்கு எதிரான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மோசமடைவதாகச் செய்திகள் வெளிவந்த நேரத்தில், அவர் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி, இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி தண்டையார்பேட்டை நேதாஜி நகர் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது. வடசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில், நேதாஜி நகர் முருகன் கோயில் தொடங்கி தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகிலுள்ள சேனியம்மன் கோயில் வரை 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். அதுமட்டுமன்றி, 100-க்கும் மேற்பட்டோர்  உடலில் அலகு குத்தி வந்தனர். அவர்களில் 20-க்கும் மேற்பட்டோர், 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் என்பதுதான் பெருங்கொடுமை. அலகு குத்தும்போது, வலி தாங்க முடியாமல் அக்குழந்தைகள் கதறித்துடித்தது காண்போர் நெஞ்சைக் கணக்கவைத்தது. குழந்தைகள் வேண்டாம் என மறுத்தும் கட்டாயப்படுத்தி அலகு குத்தப்பட்டது. மனிதநேயமற்ற இந்தக் கொடுமை, பெரும் சர்ச்சையாகிவிடும் என்பதை உணர்ந்த ஆட்சியாளர்கள், இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளிவராமல் தடுத்துவிட்டனர். அதையும் தாண்டி, ஓரிரு நாளிதழ்களில் மட்டும் செய்திகள் வெளியாகின. குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி விரிவான அறிக்கை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது. அதனடிப்படையில், தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அறிக்கை அனுப்பி விசாரித்தது. அதன் தொடர்ச்சியாகவே, சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய ஆணையம் ஆணையிட்டுள்ளது.

ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்பதற்காக, பெற்றோர்களின் சம்மதத்துடன்தான் குழந்தைகளுக்கு அலகு குத்தப்பட்டதாக தமிழக காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்க ஆணையம் மறுத்துவிட்டது. 'பால் மணம் மாறாத குழந்தைகளின் கன்னத்தின் ஒருபுறத்தில், 2 மீட்டர் நீளமுள்ள வேலை குத்தி, அதை மறுபுறம் இழுத்ததுடன், அதை சுமந்தபடியே பல கிலோமீட்டர் தூரத்துக்கு குழந்தைகள் அழைத்து வரப்பட்டதை மன்னிக்கவே முடியாது' என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறியிருக்கிறது. கடந்த ஆண்டு இந்த மனித உரிமை மீறல் நடத்தப்பட்டபோதே, அதற்குக் காரணம் யார் என்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்ட நிலையில், இப்போது மனித உரிமை ஆணையமே களமிறங்கி நடவடிக்கை எடுக்க ஆணையிட்டிருப்பது, பாதிக்கப்பட்ட  குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க உதவும். குழந்தைகள், தெய்வங்களாக பார்க்கப்படும் மாநிலத்தில், குழந்தைகளைக் கொடுமைப்படுத்தியதற்காக  மனித உரிமை ஆணையத்தின் கண்டனத்துக்கு ஆளாகியிருப்பதற்காக, தமிழக அரசு வெட்கப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சியில், அரசுக்குச் சம்பந்தமில்லை என்று கூறி பினாமி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தப்பித்துவிட முடியாது. காரணம்... ஆட்சியாளர்களின் முழு ஒப்புதலுடன், தினகரன் அணியிலும் எடப்பாடி அணியிலும் உள்ள முன்னணி நிர்வாகிகளின் ஆதரவுடன்தான் இக்கொடுமை  நிகழ்ந்தது. இதுமட்டுமன்றி, இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் இதைவிடக் கொடுமையான பல மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை வேளச்சேரியில் 668 பேருக்கு பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளி மாணவி ஒருவருக்குக் கட்டாயப்படுத்தி பச்சை குத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அந்த மாணவி கதறி அழுகிறார்; துடிக்கிறார். ‘‘என்னால் வலி தாங்க முடியவில்லை. தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்’’ என்று கதறுகிறார். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், சில பெண்கள் அவரைப் பிடித்துக்கொள்ள, அவருக்குப் பச்சை குத்தி முடிக்கப்படுகிறது. அந்நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த அப்போதைய அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், இந்தக் கொடுமையைப் பார்த்து குலுங்கிச்சிரித்த காட்சிகள் பதிவுசெய்யப்பட்டு, வாட்ஸ்அப்பில் வலம் வந்தன.

இந்த மனித உரிமை மீறலுக்காக, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக, மனித உரிமை ஆணையத்திடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பினாமி ஆட்சியாளர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டவாறு, இதற்குக் காரணமானவர்கள்மீது வழக்குப்பதிவு செய்தல், அதைத் தடுக்கத் தவறிய காவல்துறையினர்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தலா ரூ.5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.