அத்வானி விழாவில் திமுக எம்.எல்.ஏ வைத்த கோரிக்கை!

தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப்பள்ளியின் பவளவிழாவில் கலந்து கொண்டார் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி. நான்கு வருடங்கள் கழித்து அத்வானி சென்னை வந்திருந்தார்.

அத்வானி

தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ளது ஜெயகோபால் கரோடியா பள்ளி. இதன் செயலாளர் நாராயணராவ் ஜனசங்கம், ஆர்எஸ்எஸ் ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தமிழகத்தில், பா.ஜ.க தொடக்ககாலத்தில் மாநிலத் தலைவராக இருந்தவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பி.ஜே.பி பிரமுகர்களுக்கு நெருக்கமானவர். தமிழக சட்டமன்ற சபாநாயகராக இருந்த தாம்பரத்தை சேர்ந்த முனுஆதி என்பவருடன் சேர்ந்து சிறிய அளவில் பள்ளியை தொடங்கினார். இதன் பவளவிழாவிற்கு தனது நண்பர் அத்வானிதான் வரவேண்டும் என ஆசைப்பட்டார். அதன் பேரிலேயே அத்வானி இந்த விழாவில் கலந்து கொண்டார்.

தமிழிசை சௌந்தர்ராஜன், இல.கணேசன் உள்ளிட்ட பி.ஜே.பி நிர்வாகிகளோடு அ.தி.மு.க அமைச்சர்களும், எம்.பி.க்களும் விழாவில் கலந்து கொண்டனர். தி.மு.கவினர் பங்கு கொள்ளும் விழாவினை அ.தி.மு.கவினர் புறக்கணிப்பதும், அ.தி.மு.கவினர் பங்குகொள்ளும் விழாவினை திமுகவினர் புறக்கணிப்பதும் வழக்கம். திமுகவிற்கு முரண்பாடான பிஜேபி, அதிமுக என இரண்டு அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளும் விழாவில் அவர்களோடு திமுக எம்.எல்.ஏ எஸ்.ராஜாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய எஸ். ராஜா “தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். அங்கு பேருந்து நிலையம் ஒன்றை கொண்டு வரவேண்டும். திமுகவில் சோமு மத்திய ராணுவ அமைச்சராக இருந்த போது இருந்தபோது அதற்கு முயற்சித்தார். அதைத்தொடந்து  முலாயம் சிங் யாதவ், பிரணாப் முகர்ஜி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் என வரிசையாக கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தோம்.

மத்திய பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான இடத்தை பேருந்து நிலையத்திற்கு தரமுடியாது என அவர்கள் மறுத்துவிட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ். கருணாநிதி மூலமாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடமும் கோரிக்கை வைத்தோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அத்வானி அவர்கள் தாம்பரத்திற்கு 5 ஏக்கர் நிலம் தரப்படும் என உறுதியளித்தார். தமிழக அரசின் சொந்தமான 13 ஏக்கர் நிலமும், நீங்கள் கொடுப்பதாக சொன்ன 5 ஏக்கர் நிலமும் அங்கே இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் தற்போது மத்திய ராணுவ அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். மேடையில் இருக்கின்ற நீங்கள் நினைத்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியும்.” என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார். 

எம்.பி. மைத்ரேயன் பேசும் போது “ஹவாலா பிரச்சனை எழுந்த போது அத்வானி அவர்கள் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். மேலும், “நான் நிரபராதி என நிரூபிக்கும் வரை நாடாளுமன்றத்திற்குள் நுழைய மாட்டேன்” என்று அறிவித்தவர் அத்வானி. தன்னம்பிக்கையாலும், கடின உழைப்பினாலும் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி துணைப்பிரதமர் வரை உயர்ந்தார். அவரை மாணவர்கள் ஒரு ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசும்போது, “கனவு காணுங்கள் என்று சொல்கிறார்கள். அந்த கனவுகள் உங்கள் முதுகில் இலகுவாக அமரவேண்டும். டாக்டராக வேண்டும்… கலெக்டராக வேண்டும் என நிறையபேர் கனவு காண்கிறார்கள். ஆனால், நம்நாட்டில் இந்தியாவில் 330 பேர்தான் கலெக்டராக முடியும். எல்லோரும் தங்களாகவே ஒரு கனவை வளர்த்துக் கொண்டு அவை நிறைவேறாமல் போகும்போது வருத்தப்படுகிறார்கள். காலத்திற்கேற்ப படிப்புகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. புதிய பாடப்பிரிவுகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அதற்கேற்ப உங்கள் கனவுகளை மாற அனுமதியுங்கள்” என்றார்.  

இறுதியாகப் பேசிய அத்வானி, “இந்த பள்ளியில் 400 பேர் படிக்கும்போது நான் வந்திருக்கிறேன். தற்போது 6000 மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். இந்தப்பள்ளியின் வளர்ச்சி பெருமையடைய வைக்கிறது. அதற்காக உழைத்த தலைமை ஆசிரியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. நாராயணராவ் எனது நண்பர். நல்ல பண்பாளர். அவரின் நன்மதிப்பிற்காகவே இந்த விழாவிற்கு வந்திருக்கின்றேன். இந்த பள்ளி நிறைய ஆசிரியர்களையும், அதிகாரிகளையும் உருவாக்கி இருக்கிறது. இன்னும் 1000 ஆண்டுகள் இந்த பள்ளியின் சேவை தொடர வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!