வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (27/09/2017)

கடைசி தொடர்பு:14:14 (27/09/2017)

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தொடரும் பனிப்போர்... விழிபிதுங்கும் தமிழக மக்கள்!

ஓ.பி.எஸ். - எடப்பாடி

.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்ட அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இணைந்துவிட்ட நிலையில், அரசின் முக்கிய முடிவுகளை எடப்பாடியே எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஓ.பி.எஸ். முகாமில் தொடர்ந்து நிலவுகிறது. இதனால், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தொடர்ந்து பனிமோதல் நீடித்து வருவதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை' என்ற கூற்றுக்கு ஏற்ப, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் எடப்பாடி தரப்பினர் இணைந்துவிட்ட போதிலும், இதுவரை ஓ.பி.எஸ்-க்கு பல்வேறு விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று அங்கலாய்க்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். மேலும் ஓ.பி.எஸ் அணியினரை எதிர் முகாமில் உள்ளவர்கள் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சசிகலாவால் முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதும், அவரின் உறவினர்களை புறக்கணிக்கத் தொடங்கினார். இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்கான லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டி.டி.விதினகரன் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இரு அணிகளும் இணைவதற்கு காலக்கெடு விதித்தார், அவர் விதித்த கெடுவுக்குள் இரு அணிகளும் இணையவில்லை. இதையடுத்து, கட்சிப்பணிகளில் தினகரன் தீவிரம் காட்டத் தொடங்கியது, எடப்பாடி மற்றும் அமைச்சர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், எடப்பாடிக்கும், தினகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தினகரனின் ஆதரவாளர்களைப் புறக்கணித்த எடப்பாடி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து கட்சியின் பொதுக்குழுவையும் நடத்தி முடித்துள்ளனர்.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியதுடன், அவரால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் உள்பட எந்தவொரு நியமனமும் செல்லாது என்றும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

'சரி, அணிகள்தான் இணைந்து விட்டதே' என்று அ.தி.மு.க. தொண்டர்கள் நிம்மதி அடைந்த நிலையில், தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ-க்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். 

ஓ.பி.எஸ்.இதுபோன்ற அரசியல் பரபரப்புக்கு இடையே, ஓ.பன்னீர்செல்வம் வகிக்கும் நிதித்துறை, வீட்டுவசதித்துறை உள்ளிட்ட துணை முதல்வரின் கீழ் வரும் அனைத்துக் கோப்புகளும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வைக்குச் சென்ற பிறகே ஒப்புதல் அளிக்கப்படுவதாக தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ஓ.பி.எஸ். கூடாரத்தில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது எடப்பாடியின் கீழ் வரும் அமைச்சர் என்பது ஒருபுறம் இருந்தாலும், அணிகள் இணைப்பின்போது துணை முதல்வர் என்ற பதவியை அளித்து விட்டு, தற்போது வேண்டுமென்றே புறக்கணிப்பதாக வருத்தப்படுகிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

எடப்பாடி தரப்பினரோ, அணிகள் இணைப்பைக் காரணம்காட்டி எப்படியும் இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதாம். அதன்மூலம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதுடன், தங்கள் தரப்பு பலத்தைக்காட்டி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் வலம் வருவதாகத் தெரிவிக்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆனால், ஓ.பி.எஸ் தரப்பினர், அவசரப்பட்டு பல நிபந்தனைகளை விட்டுக்கொடுத்து, இணைந்த பின் தற்போது தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். இதனால், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவர் மட்டுமல்லாது, அவர்களின் ஆதரவாளர்களிடையேயும் பனிப்போர் தொடர்வதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மற்றும் தினகரன் தரப்பினர் என அ.தி.மு.க பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியாளர்களின் நிலை கண்டு, தங்களுக்குத் தேவையான திட்டங்களோ, பணிகளோ நடைபெறாத நிலையில், தமிழக மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்