Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’அச்சுறுத்தும் சப் - இன்ஸ்பெக்டர்கள்’ : ஜி. ராமகிருஷ்ணன் டி.ஜி.பி-க்கு கடிதம்

நீலகிரி மாவட்டதில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளின்கீழ் உள்ள அமைப்புகளை, காவல்துறை முடக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், தமிழக  டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து, தமிழகக் காவல்துறை இயக்குநருக்கு (டி.ஜி.பி) எழுதியுள்ள கடிதத்தில், “நீலகிரி மாவட்டத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அமைப்புகளின் பணிகளை முடக்கும் நோக்கத்தோடு, கட்சி முன்னணி ஊழியர்கள்மீது தேவையற்ற முறையில் வழக்குகள் பதிவுசெய்வதை, நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

குறிப்பாக, நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட எருமாடு பகுதியில், கடந்த 2017 ஆகஸ்ட் 22 அன்று, இந்திய மாணவர் சங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த எருமாடு காவல் உதவி ஆய்வாளர்கள் நிக்கோலஸ் மற்றும் சசிதரன் ஆகியோர், “இங்கு மாணவர் சங்கக் கொடியேற்ற அனுமதி கிடையாது, உடனடியாக அகற்றுங்கள்” என மாணவர்களைக் கடுமையாக எச்சரித்து, பொது இடத்தில் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.

மேலும், அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், “மாணவர் சங்கத்தை இங்கு அனுமதிக்காதீர்கள். அது ஒரு தீவிரவாத அமைப்பு”  என அவதூறும் செய்துள்ளார்கள். மாணவர் சங்கக் கிளையில் செயல்படும் முன்னணி மாணவர்களை, காவல் நிலையத்துக்குக் கட்டாயப்படுத்தி கூட்டிச்சென்று, “மரியாதையாக இந்திய மாணவர் சங்கத்தின் கொடியை அகற்றி விட்டு, சங்கக் கிளையைக் கலைத்துவிட்டு, ஒழுங்காக வேலையைப் பாருங்கள், இல்லையெனில், கஞ்சா வைத்துள்ளீர்கள் எனப் புகார் பதிவுசெய்து, உள்ளே தள்ளிவிடுவேன்” என மாணவர்களை சுமார் ஒன்றரை மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து, தேவாலா காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புகார்செய்யப்பட்டது. அதன் பேரில், அவர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்திய மாணவர் சங்கக் கொடியை வைத்துக்கொள்ளலாம். இனி பிரச்னை எதுவும் வராது என உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகும், மேலும் இனிமேல் எருமாடு பகுதியில் எவ்வித பொதுநிகழ்ச்சிகளுக்கும் உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை ஆகிய மூன்று துறையினரின் அனுமதி கட்டாயமாகப் பெறவேண்டுமெனவும், துண்டறிக்கை அச்சிட வேண்டுமெனில், அதன் நகலை காவல்துறையினரிடம் காட்டிவிட்டுத்தான் அச்சிட வேண்டுமெனவும் எழுத்துபூர்வமான சுற்றறிக்கையையும் உதவி ஆய்வாளர் நிக்கோலஸ் அனுப்பியுள்ளார். மேலும், எருமாடு காவல் துணை ஆய்வாளர்களான நிக்கோலஸ் மற்றும் சசிதரன் ஆகியோரின் இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டித்து, 2017 செப்டம்பர் 8ல், எருமாடு பஜாரில் முறையான அனுமதிபெற்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனக் கூட்டமும் நடத்தப்பட்டது. 

கண்டனக் கூட்டத்துக்குப் பிறகும் காவல்துறையினரின் அத்துமீறல் மேலும் அதிகரித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, வி.ஏ.பாஸ்கரன், கட்சி உறுப்பினர்கள் சௌகத் அலி, உஸ்மான், ஷமீர் ஆகியோர்மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் 2017 செப்டம்பர் 15 அன்று வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் உள்ள கட்சி உறுப்பினர் உஸ்மான் என்பவரின் திருமணம், செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது. திருமணத்துக்கு இரு தினங்களுக்கு முன், உள்நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரை உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைக்கப்போவதாக ஒரு தகவலும் நிக்கோலஸ், சசிதரன் ஆகியோரால்  பரப்பப்பட்டது. இது, அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு, திருமணம் தடைபட்டுவிடுமோ என்ற ஐயத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தியது.

எனவே, ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பது, பொது இடங்களில் நாகரிகமற்ற முறையில் மாணவர்களை அச்சுறுத்துவது, பொய் வழக்குகளைப் பதிவுசெய்வதாக மிரட்டுவது, சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு, எது வேண்டுமானாலும் செய்வது என தொடர்ச்சியாக சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டுவரும் எருமாடு காவல் உதவி ஆய்வாளர்கள் நிக்கோலஸ் மற்றும் சசிதரன் ஆகியோரைப் பணி நீக்கம் செய்து, துறை ரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement