Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எங்கள் இதயக் குமுறலைக் கேளுங்கள்; நீதி வழங்குங்கள்'- ஜெனீவாவில் வைகோ ஆவேசம்

"இலங்கையில் தமிழர் தாயகம் நாஜிகள் நடத்திய சித்ரவதைக் கூடம்போல ஆகிவிட்டது. எங்கள் இதயக் குமுறலை, வேதனைப் புலம்பலை, பொங்கி வரும் கண்ணீரை மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் பாருங்கள்; எங்களுக்கு நீதி வழங்குங்கள்" என்று ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசினார்.

ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் பங்கேற்றுப் பேசி வரும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சிங்களர்கள் மீண்டும் பிரச்னை செய்யக்கூடும் என்பதால், புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர் அமைப்புகள், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிர்வாகத்திடம் இந்தச் சம்பவம் குறித்துப் புகார் கொடுத்தனர். இதையடுத்து, ஐநா கவுன்சில் பாதுகாப்புத் துறையினர் வைகோவுக்குப் பாதுகாப்பு மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, "2001 செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், இனவெறி, இன வேற்றுமைக் கொடுமைகளை எதிர்த்து நடைபெற்ற அனைத்துலக மாநாடு (World Conference against racism, racial discrimination, xenophobia and related intolerence declared in Durban) மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா வாழ்த்துகளுடன் நடைபெற்றது. அம்மாநாட்டில், குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகள், துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பிரகடனத்தில் சொல்லப்பட்டன. ஆனால், இலங்கைத் தீவில் 2006 ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதியன்று, போரில் உயிர் நீத்த குடும்பங்களின் பிள்ளைகளான சிறுமிகளின் மறுவாழ்வு இல்லம் அமைந்திருந்த செஞ்சோலையில், இலங்கை ராணுவத்தின் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில், மிகக் கொடூரமாக 61 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர்; 170 பெண் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். எட்டு வயதுச் சிறுவனான பாலச்சந்திரன் மார்பில் ஐந்து குண்டுகள் பாய்ந்து துடிதுடிக்கக் கொல்லப்பட்டான். அவன் செய்த பாவம் என்ன? பிரபாகரனின் மகனாகப் பிறந்ததுதான். பத்திரிகையாளர் தராக்கி சிவராம், 2005-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி, இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவினரால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் தமிழ் உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், தியாகராஜா மகேஸ்வரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மனித உரிமைக் கவுன்சிலின் அன்றைய தலைவரான லூயிஸ் ஆர்பர் அம்மையார், இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்வையிடுவதற்குக்கூட இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
தமிழர்களின் சார்பில், மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளை மிகுந்த பணிவோடு பிரார்த்தனை செய்து கேட்கிறேன்: தமிழர் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, எங்கள் கண்ணீரைத் துடையுங்கள். அதன் மூலம், ஈழத்தமிழர்களுக்குப் புதிய விடியல் உதயமாகட்டும்.

1990-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதியன்று, மனித உரிமைகளுக்கான வியன்னா பிரகடனத்தின்படி, உலகில் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளும், குறிப்பாக சுய நிர்ணய உரிமையும் உண்டு என்பதாகும். 1995-ம் ஆண்டு, யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்து லட்சம் தமிழர்கள், ராணுவத் தாக்குதலால் வெளியேற்றப்பட்டு, திக்குத் தெரியாமல் திண்டாடி, காடுகளுக்குள் செல்ல நேர்ந்தது. அப்போது போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பாலும், அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் புத்ரோஸ் புத்ரோஸ் காலியும், கொடுந்துயரத்துக்கு ஆளாகிவிட்ட ஈழத்தமிழர்களின் கண்ணீரைத் துடைத்து, ஆதரவு தர வேண்டுகோள் விடுத்தனர். மனித உரிமைகளுக்கான சர்வதேச மாநாடு திட்டவட்டமாகத் தெரிவிப்பது என்னவென்றால், சுய நிர்ணய உரிமையை மறுப்பதே மனித உரிமை மீறல் ஆகும் என்பதுதான். அத்துடன், திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெற்று, மனித உரிமைகள் மொத்தமாக நசுக்கப்பட்டு, யுத்த காலத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெருங்கூட்டமாக அகதிகள் ஆவதும், காணாமல் போவதும் குறித்து  ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது.

அனைத்துலக மாநாடு எவற்றிற்கெல்லாம் கண்டனம் தெரிவித்ததோ, அவை அனைத்தும் இலங்கைத் தீவில், சிங்கள ராணுவத்தால் நடத்தப்பட்டது. தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த உண்மைச் சம்பவங்களை, லண்டன் சேனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ ஒளிப்பதிவுகள் நிரூபித்துவிட்டன. நாங்கள் கேட்பதெல்லாம், ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றிவிட்டு, ஐ.நா.மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான். இலங்கையில் தமிழர் தாயகம் நாஜிகள் நடத்திய சித்ரவதைக் கூடம்போல ஆகிவிட்டது. எங்கள் இதயக் குமுறலை, வேதனைப் புலம்பலை, பொங்கி வரும் கண்ணீரை மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் பாருங்கள்; எங்களுக்கு நீதி வழங்குங்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement