வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (27/09/2017)

கடைசி தொடர்பு:14:40 (27/09/2017)

மயிலாடுதுறை பள்ளி மாணவர்கள் கொண்டாடிய நவராத்திரி கொலு

டந்த 21-ம் தேதி தொடங்கி, நவராத்திரி நடைபெற்றுவருகிறது. இதன்பொருட்டு பல கோயில்கள், வீடுகளில் மக்கள் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். இந்தக் கலாசாரத்தைப் பள்ளி மாணவர்களிடம் எடுத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, மயிலாடுதுறையில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளி, அழகு ஜோதி அகாடமி. எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில், ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து பிரமாண்டமான கொலு அமைத்து, நவராத்திரியைக் கொண்டாடிவருகின்றனர். பள்ளிக்கு அருகே உள்ள திடலில் பெரிய பந்தல் அமைத்து, பல வண்ண விளக்குகளுடன் சிறப்பு அலங்காரங்கள் செய்து கொலு அமைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி

இதில் ஒன்பது படிகள் அமைக்கப்பட்டு, சுமார் 300 கடவுள் பொம்மைகள் அடுக்கப்பட்டுள்ளன. இந்து சமயக் கடவுள்களின் சிலைகள், சமயக் குரவர்களின் சிலைகள் , கும்பகர்ணனின் சிலை போன்றவை படிகளில் அடுக்கப்பட்டுள்ளன. அதற்குக் கீழே, இந்துக்களின் திருமணக் காட்சி, கிராமப்புற மக்களின் வாழ்க்கைமுறை  போன்றவை இடம்பெற்றுள்ளன. குழந்தைகளைக் கவரும் விதமான சோட்டா பீமில் வரும் டோலக்பூர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மற்றொரு பக்கம் விவேகானந்தர், மகாத்மா காந்தி, பாரதியார், காமராசர், அப்துல் கலாம் போன்ற தேசத் தலைவர்களின் உருவ பொம்மைகள் உள்ளன. இந்தக் கொலுவின் அருகே, மலை போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. அது, இந்தக் கொலுவுக்கு மேலும் அழகூட்டுகிறது.

நவராத்திரி கொலு

தினமும் பள்ளி முடிந்தவுடன், மாலை 6 மணிக்கு இந்தக் கொலுவுக்கு ஆசிரியர்கள் பூஜை செய்கின்றனர். இதில், பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொள்கின்றனர்.மேலும் இந்தக் கொலுவில்,  மற்ற பள்ளி மாணவர்களும், அருகில் உள்ளவர்களும் கலந்துகொள்கின்றனர்.

இதுபற்றி இப்பள்ளியின் செயலாளர் சிவக்குமாரிடம் கேட்டபோது, " பள்ளி மாணவர்களிடம் நமது கலாசாரத்தை எடுத்துச்செல்வதே இதன் நோக்கம். இதுபோன்ற கொலுவை இந்த வருடம்தான் ஆரம்பித்துள்ளோம். குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். இனி, ஒவ்வோர் ஆண்டும் இதைப் பின்பற்றுவோம் " என்றார்.

நவராத்திரி கொலு

"இந்தக் கொலுவில், அனைத்து மதத்தைச் சார்ந்த குழந்தைகள் ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் கலந்துகொள்கின்றனர். இந்த கோலுவில் உள்ள நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் தங்கள் பொற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட குழந்தைகள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நாயன்மார்களின் கோயிலுக்கு அழைத்துச் செல்லும்படி தங்களைக் கேட்பதாக, பெற்றோர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் பாட்டுப் பாடியும், நடனம் ஆடியும் தங்களது திறமைகளை இந்தக் கொலு பூஜையில் வெளிப்படுத்துகின்றனர். இந்தக் கொலு, குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர்களது திறமையை மேம்படுத்துவதாகவும் உள்ளது" என்கின்றனர் இப்பள்ளியின் ஆசிரியைகளான தெய்வானையும் ராதிகாவும்.

கொலு ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள்,  கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதேபோல, நவராத்திரி முடிகின்ற 27,28 தேதிகளில், சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நவராத்திரியை சாதாரண விழாவாக இல்லாமல் பள்ளி மாணவர்களிடம் கலாசாரத்தை எடுத்துச் செல்லும் விழாவாக நடத்தும் இப்பள்ளியின் செயல், பாராட்டும் விதமாக உள்ளது.