“பையன் ‘அத்தா... அத்தானு’ கட்டிப்பிடிச்சு அழுததும் உடைஞ்சுட்டேன்!” - கடத்தப்பட்ட சிறுவனின் தந்தை உருக்கம் | I was broken when my child was cry - kidnapped child father's emotional talk!

வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (27/09/2017)

கடைசி தொடர்பு:15:41 (27/09/2017)

“பையன் ‘அத்தா... அத்தானு’ கட்டிப்பிடிச்சு அழுததும் உடைஞ்சுட்டேன்!” - கடத்தப்பட்ட சிறுவனின் தந்தை உருக்கம்

சென்னை, தண்டையார்பேட்டையில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக் கடத்தப்பட்டு, கொருக்குப்பேட்டையில் மீட்கப்பட்டது. விளையாட்டாகக் குழந்தையைச் சிறுவன் ஒருவன் கடத்தியதாகக் கூறும் காவல் துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சைக்கிளின் நிறத்தைச் சிறுவன் மாற்றியுள்ளான் என்றும் தெரிவித்துள்ளனர். 

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ். இவரின் இரண்டரை வயது ஆண் குழந்தை முகமது சாது. நேற்று முன்தினம் (25.09.17) மதியம் 12 மணியளவில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன், முகமது சாதுவை அழைத்துச் சென்றிருக்கிறான். குழந்தையைக் காணாமல் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் இலியாஸ் புகார் கொடுத்தார்.

சிறுவன்

பட்டப்பகலில் குழந்தைக் கடத்தப்பட்ட சம்பவத்தால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனிடையே, குழந்தையைக் கடத்திய சிறுவனைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. நேதாஜி நகர் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, முகமது சாதுவை, ஆரஞ்சு நிற சைக்கிளில் அமரவைத்து அழைத்துச் செல்வது தெரிந்தது. தனிப்படையினர் உடனடியாகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொருக்குப்பேட்டையில் சிறுவன் இருப்பதைக் கண்டறிந்து, குழந்தையை மீட்டனர். கடத்திய சிறுவனிடம் விசாரணை நடத்திய போலீஸார், விளையாடுவதற்காகவே குழந்தையைச் சிறுவன் அழைத்துவந்ததாகத் தெரிவித்தனர். ஆனால், சைக்கிளின் நிறத்தை மாற்றியது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், அந்தச் சிறுவனைக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். 

இதுகுறித்து குழந்தையின் தந்தை முகமது இலியாஸிடம் பேசினோம். ''எங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆச்சு. சிசேரியன் மூலம் குழந்தை பெற்றதால், மனைவிக்கு உதவியாக வீட்டுல சொந்தக்காரங்க இருந்தாங்க. நான் 11.30 மணிக்குத்தான் வெளியில் போனேன். அதுவரைக்கும் என்னோடுதான் முகமது சாது இருந்தான். அப்புறம், வெளியில் விளையாடப் போறேன்னு வீட்டுல இருக்கிறவங்ககிட்ட சொல்லிட்டு, தெருவில் விளையாடியிருக்கான். அப்போதான் அந்தப் பையன் சைக்கிளில் வந்திருக்கான். அவன் எங்க ஏரியாவே கிடையாது. என் பையன்கிட்ட பேச்சு கொடுத்திருக்கான். அவன் அழ ஆரம்பிச்சதும் சைக்கிளில் உட்காரவச்சு விளையாட்டுக் காட்டிருக்கான்.

முகமது சாது விளையாட்டுல மூழ்கி இருக்கும்போது சைக்கிளை வேகமா ஓட்டிட்டுப் போயிருக்கான். என் பையனைக் காணோம்னு தெரிஞ்சதும், பக்கத்துத் தெருவில் இருக்கிற சி.சி.டிவி-யில் பார்த்து, சைக்கிளில் கடத்திட்டுப் போறதைத் தெரிஞ்சுக்கிட்டோம். அதைவச்சு விசாரிச்சப்போ அவன் சைக்கிள் கலரை மாத்திட்டது தெரிஞ்சது. நானும் என் சொந்தங்களும் ஒரு பக்கம் தேடிட்டு இருக்க, போலீஸ் ஒரு பக்கம் தேடிச்சு. இரவு 7.30 மணிக்கு, 'பையன் கிடைச்சுட்டான்னு சொல்லி, கூட்டிட்டு வந்தாங்க. அவன் என்னைப் பார்த்ததும் 'அத்தா, அத்தா'னு கட்டிப்பிடிச்சுத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான். அதைப் பார்த்து ரொம்பவே உடைஞ்சுப் போயிட்டேன். அவனைப் பார்த்த பிறகுதான் எனக்கு உசுரே வந்துச்சு. 

சிறுவன்

கடத்தின பையனின் அம்மாவைப் பார்த்தால் தமிழ்நாட்டு ஆளு மாதிரி தெரியலை. அந்தப் பையனுக்கு பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் அக்காவும் இருக்காங்க. என் பையனை எதுக்குக் கடத்தினாங்கனு தெரியலை. விசாரணையில், ‘என் பையனுக்கு மூளை வளர்ச்சி சரியில்லை’னு பையனின் அம்மா சொல்றாங்க. மூளை வளர்ச்சி சரியில்லாதவனுக்கு சைக்கிள் கலரை மாற்றும் அளவுக்கு ஐடியா தோணுமா? அவங்களுக்குச் சரியான தண்டனையை போலீஸ்தான் வாங்கித் தரணும். நான் பட்ட கஷ்டத்தை இனி யாரும் படக் கூடாது. பையனைக் காணோம்னு தெரிஞ்சதிலிருந்து என் மனைவி அழுது, அழுது மூச்சுத்திணறலே வந்துருச்சு. என் பையன் மட்டும் கிடைக்கலைன்னா என் மனைவியும் என்னைவிட்டுப் போயிருப்பா. எங்க வீடே துக்க வீடு மாதிரி ஆயிருச்சு. என் பையனும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டு வராமல் அழுதுட்டிருக்கான். என் பையன் கிடைச்சதுக்கு அல்லாவுக்கு நன்றி சொல்லணும்'' என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்