Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’சிங்களர்களின் அநாகரிகப் போக்கை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்’- திருமாவளவன்

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், கடந்த 25-ம் தேதி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன் சிங்களர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன்

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகளும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அனுமதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களும் கலந்துகொண்டு, உலகம் தழுவிய அளவில் பல்வேறு பிரச்னைகள்குறித்து விவாதிப்பது நடைமுறையாகும். அந்த வகையில், தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தொடரில், ஈழத்தமிழர்கள் பிரச்னைகள்குறித்த அமர்வில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவும் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்.

ஈழத்தமிழர்கள் சந்தித்துவரும் அவலங்கள்குறித்தும் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவதுகுறித்தும் தமிழீழம் தொடர்பாக உலகத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்துவதுகுறித்தும் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பின்னர் அக்கூட்டத்தில் பங்கேற்ற சிங்களர்கள் சிலர், வைகோவைச்  சூழ்ந்துகொண்டு அவரை அச்சுறுத்தும் வகையில் அநாகரிகமான முறையில் நடந்துள்ளனர். ஐ.நா மனித உரிமைப் பேரவை வளாகத்துக்குள்ளேயே வைகோவைத் தாக்கும் உள்நோக்கத்தோடு நெருங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. சிங்களர்களின் இத்தகைய அருவருப்பான நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசும் சர்வதேச நாடுகளும் சிங்களர்களின் இந்தப் போக்கைக் கண்டிக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், அவ்வாறு நடந்துகொண்ட சிங்களர்கள் மற்றும் சிங்கள அரசின் போக்கு, மனித உரிமை மீறலாகும். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்றும், மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்துகொண்ட அந்த சிங்களர்களைக் கைதுசெய்ய வேண்டுமென்றும் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில், சுதந்திரமாகக் கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை ஐ.நா பேரவை உறுதிப்படுத்த வேண்டும். கருத்துரிமையைத் தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அக்கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்கவிடாமல் வெளியேற்ற வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement