வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (27/09/2017)

கடைசி தொடர்பு:18:05 (27/09/2017)

வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு! - வெளியானது அரசாணை

வனத்துறை அதிகாரிகள்

Representative image

தமிழக வனத்துறையில் பணியாற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான சம்பளத்தை 50 சதவிகிதம் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வரும் யானையை விரட்டுவது, கரடி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளை கூண்டுக்குள் பிடித்து வனத்துக்குள் விடுவது வரையில் வேட்டைத் தடுப்பு காவலர்களின் பணி மிக முக்கியமானது. பெரும்பாலும் பழங்குடியின மக்களே இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதம்தோறும் 6,750 ரூபாய் சம்பளத்துக்கு இவர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த சம்பளமும் அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், வேட்டைத் தடுப்பு காவலர்களின் சம்பளத்தை பத்தாயிரமாக உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் (அரசாணை நிலை எண்:146, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வனம்: 2, நாள்: 26-09-2013) , “தமிழ்நாடு வனப்பகுதியில் காடுகளின் உட்பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வேட்டைத் தடுப்பு முகாம்கள் செயல்படுவதால் வேட்டையாடுதல் மற்றும் திட்டமிட்ட கடத்தல் போன்றவை கணிசமான அளவில் தடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கடினமான பணியில் ஈடுபட்டு வரும் 908 வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திரத் தொகுப்பு ஊதியம் ரூ.6,750-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்’ என குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

’இந்த ஊதிய உயர்வு குறித்து வெளியான அரசாணை முற்றிலும் தி.மு.க எம்.எல்.ஏ தங்கம் தென்னரசுவின் முயற்சியால் கிடைத்துள்ளது’ என மகிழ்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.