Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தடுப்பணை கட்டுங்கள்; இல்லையென்றால் பாலைவனமாகிவிடும்' - வேதனையில் அரியலூர் விவசாயிகள்

மருதையாற்றில் தடுப்பணைக் கட்டவில்லையென்றால் அரியலூரே பாலைவனமாகிவிடப்போகிறது எனக் கடுமையாக எச்சரிக்கின்றனர். அரியலூர் மாவட்டத்துக்கு வரும் முதல்வரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் எனக் கொந்தளிக்கிறார்கள் விவசாயச் சங்கத்தினர். 

               


பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது மருதையாறு. மழைக்காலங்களில் மழை நீரின் வடிகாலாகவே மருதையாறு செயல்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மருதையாறு உற்பத்தியானாலும் இவ்வாற்றின் அதிகளவு பயணிப்பது அரியலூர் மாவட்டத்தில்தான். சுமார் 20 கி.மீ ஓடும் இம்மருதையாறு முட்டுவாஞ்சேரி அருகில் ஓடக்கூடிய கொள்ளிடம் ஆற்றில் கலந்து கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. மழைக்காலங்களில் காட்டாறு வெள்ளம்போல ஓடும் மழைநீர் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.

          

இவ்வாறு வீணாகும் நீரைச் சேமிக்கவும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் மருதையாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதற்காக விவசாயிகள் சார்பில் பல்வேறு முற்றுகைப் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடுப்பணைகள் கட்டப்பட்டால் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து அருகில் உள்ள போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்னை அகலும். இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்துவருகிறது. 5 வருடத்துக்குப் பிறகு மருதையாற்றில் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ளமாகக் கரைபுரண்டு ஓடுகிறது.

       

இந்தத் தண்ணீர் கடலில் வீணாகக் கலந்துவருகின்றது. சிமென்ட் ஆலைகள் தினமும் ஒரு நாளைக்குக் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மழை நீரையும் தடுப்பணைகள் கட்டாமல் வீணாக விட்டுவிடுகிறோம். இனியும் இப்பகுதியில் தடுப்பணைகள் கட்டவில்லையென்றால் கடும் பஞ்சம் ஏற்படப்போகிறது எச்சரிக்கின்றனர் விவசாய அமைப்பினர். எனவே வரும் காலங்களிலேயாவது பெய்யக்கூடிய மழை நீரை சேமிக்கும் வகையில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருதையாற்றில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை முழுமையாக அகற்றி கரைகளைப் பலப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

செய்யாத பட்சத்தில் அரியலூர் மாவட்டத்துக்கு வரும் முதல்வரை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கின்றனர் விவசாயச் சங்கத்தினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement