வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (27/09/2017)

கடைசி தொடர்பு:19:45 (27/09/2017)

சிறுவர்களுக்கு அலகு குத்திய விவகாரம்: ஸ்டாலின் வலியுறுத்தல்!

ஸ்டாலின்

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் அ.தி.மு.க-வினர் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். அப்படி 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி, சென்னை தண்டையார்பேட்டையில் 20 சிறுவர்களுக்கு அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தவைக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனத் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய மனித உரிமைகள் ஆணைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதிச்சட்டத்தின் பிரிவுகளின் கீழ் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சென்னை மாநகர காவல் ஆணையரைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "தமிழக அரசு நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்பதை ரத்து செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதுடன், இனி அரசியல் பேசும் விழாவில் மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களின் கல்வி பாதிக்க அதிகாரிகள் துணைபோகக் கூடாது" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.