’ஜெயலலிதா கைரேகை உண்மைத் தன்மை’: விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத் தன்மை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தலைமைத் தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தபோது திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில், வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்கக் கோரும் மனு ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாகக் கைரேகையுடன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றிபெற்றார். 

தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸுக்கு அ.தி.மு.க.வின் சின்னம் ஒதுக்குவது தொடர்பான மனுவில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத் தன்மையை ஆய்வுசெய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஆஜராகி விளக்கமளித்திருந்தனர்.

இந்தநிலையில், ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெயலலிதா கைரேகையின் உண்மைத் தன்மை குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் அக்டோபர் 6-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!