வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (27/09/2017)

கடைசி தொடர்பு:20:30 (27/09/2017)

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி இன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்  மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரைத் தராததாலும் கடுமையான வறட்சி நிலவியதாலும் சம்பா சாகுபடி முழுமையாகக் கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தார்கள். இந்திலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடியாவது கை கொடுக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். அதுவும் கைவிட்டுப்போனது. குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.

தற்போது கர்நாடகாவில் பருவ மழை அதிகளவில் பெய்து, வெள்ளநீரின் வரத்து அதிகமானதாலும் தமிழ்நாட்டில் அவ்வப்போது ஓரளவுக்கு மழை பெய்து வருவதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளது. இதனால் சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களில் போராட்டம் நடைபெற்றது.