வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (27/09/2017)

கடைசி தொடர்பு:21:15 (27/09/2017)

மேகமலையைப் 'பதம்' பார்த்த தனியார் எஸ்டேட்டுகள்! - ஆய்வில் இறங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி

மேகமலை வன உயிரினக்காப்பகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு தனியார் தோட்டங்களுக்குச் சாலை போடப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான மேகமலை உயிரினக் காப்பகத்தில் இதுபோன்ற ஒரு வனக்குற்றம் நடந்ததை முன்பே பதிவு செய்திருந்தோம். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்ய மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் தலைமையில் ஓர் ஆய்வுக்குழு ஒன்று மேகமலைக்கு அனுப்பப்பட்டது.

இந்த ஆய்வில் அந்த இடம் பாதுகாக்கப்பட்ட இடம் என்பது உறுதியானது. சம்பந்தப்பட்ட தனியார் தோட்டங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில், இன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின நலத்துறைச் செயலருமான கார்த்திக் ஐ.ஏ.எஸ், மரங்கள் வெட்டப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வுசெய்தார். அவருடன், மேகமலை வன உயிரினக் காப்பாளர் ஆனந்தகுமார் சென்றிருந்தார். காலை முதல் மாலை வரை ஆய்வுநடந்தது. ஆய்வுப்பணிகள் குறித்துப் பேசிய அதிகாரிகள், "சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்திருக்கிறோம். அதன் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம். இப்போதைக்கு ஆய்வுகுறித்து எதுவும் கருத்துச் சொல்ல முடியாது" எனத் தெரிவித்தனர். 'மேகமலை தொடர்பாக இன்றுவரை பல மர்மங்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த ஆய்வு அறிக்கையும் மர்மங்களில் ஒன்றாக இல்லாமல், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு வனம் காக்கப்பட வேண்டும்' என்பதே சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.