வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (27/09/2017)

கடைசி தொடர்பு:09:59 (28/09/2017)

பரோலுக்குத் துணைநின்ற ஸ்டாலினுக்கு நன்றி: நெகிழும் அற்புதம்மாள்

பேரறிவாளனுக்குப் பரோல் கிடைக்க துணை நின்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவரைப் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்தார்.

அற்புதம் அம்மாள்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, பேரறிவாளன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார். இதையடுத்து, 26 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த மாதம் 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனது தந்தை மற்றும் தாயாருடன் நேரத்தைக் கழித்து வரும் பேரறிவாளனை, ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், நலம் விரும்பிகள் எனப் பலரும் நேரில் சந்தித்தனர்.

பேரறிவாளனின் ஒரு மாத பரோல் முடிவடையும் தருவாயில் அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து, பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கும், தனக்காகத் துணை நின்ற பலருக்கும் அற்புதம்மாள் நன்றி தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க செயல் தலைவருமான ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அற்புதம்மாள் கூறுகையில், “என் மகனுக்கு பரோல் கிடைக்க துணைநின்ற ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவே இன்று அவரைச் சந்தித்தேன்” என்றார்.